பதுளையில் வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், தனியார் பஸ் சாரதியொருவர் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இதனுடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் நேற்று (23) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (22) மாலை 6 மணியளவில் பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ்களுக்கு எரிபொருள்களைப் பெற்றுக் கொள்வதற்கு பஸ்கள் வரிசைகள் நின்ற போது, பின்னாலிருந்து பஸ்சொன்று முன்னால் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போது, பெரும் அமைதியின்மையும், பதற்றமும் ஏற்பட்டது. அத்துடன் வரிசையிலிருந்த பிறிதொரு தனியார் பஸ் சாரதி, முன்னால் சென்று எரிபொருளைப் பெற முயற்சித்த பஸ் சாரதியை, கத்தியினால் வெட்டியதுடன், தமது பஸ்சையும் எடுத்துக்கொண்டு கத்தியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, தப்பிச் சென்றவரைக் கைது செய்வதுடன், அவருக்குதவியவர்களையும், கைது செய்யும்படி, எரிபொருளைப் பெற வந்தவர்கள் பதுளை பிரதான பாதையை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுவரை கத்திக் குத்துக்கு இலக்கானவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதையும் போராட்டக்காரர்கள் தடுத்திருந்த நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்த தனியார் பஸ் சாரதியை, பதுளைப் பொலிஸார் தலையிட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.