எரிபொருள் விநியோகத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சதநாயக்க, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில நபர்கள் பலவந்தமாக எரிபொருளைப் பெற முயற்சித்ததாக குற்றம் சுமத்தினார்.
இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அதிகாலை 2 மணி வரை திறந்திருந்ததாகவும், காவல்துறை மற்றும் இராணுவத்தின் உத்தரவுகளை மதிக்காமல் அதிகாலை 3:30 மணி வரை திறந்திருக்குமாறு சில நபர்களால் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என சதநாயக்க தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை தங்களுடையது என கருதி ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால், அரசாங்கத்துடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வார தேவைக்காக எரிபொருள் இருப்புக்கள் ஓர்டர் செய்யப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை எனத் தோன்றுவதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.
200-250 வாகனங்களுக்கு நிரப்பக்கூடிய 6,600 லிட்டர் டீல் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு வழங்கப்படுகின்றன என்றார்.
பேருந்து ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100-125 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. அதாவது 6,600 லிட்டர் டீசலை 66 லொரிகள் அல்லது பேருந்துகளுக்கு மட்டுமே வழங்க முடியும். எவ்வாறாயினும், வாகனங்கள் இந்த எண்ணிக்கையை விட மும்மடங்கு வரிசையில் நிற்கின்றன என்று நாதுன்னா கூறினார்.
சில நபர்கள் எரிபொருளை நிரப்பிய பின்னர், வீடுகளில் கான்களில் நிரப்பி விட்டு, மீண்டும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் இணைவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.