அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் இலங்கைப் பின்னணியுடைய இரண்டு பெண்கள் வெற்றியீட்டி நாடாளுமன்றத்திற்கு தேரிவாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழையை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மிஷேல்ஆனந்தராஜா மற்றும் சிங்களப் பெண்ணான கசண்ட்ரா பெர்னாண்டோ ஆகியோரே வெற்றியீட்டியவர்களாவர்.
மிஷேல்ஆனந்தராஜா
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்து, ஸாம்பியா என்ற சிறிய ஆபிரிக்க நாட்டில் பதினொரு வயது வரையிலான குழந்தைப் பருவத்தை கழித்துள்ளார். பதினோராவது வயதில் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார்.
தந்தை ஒரு பட்டயக் கணக்காளர். தாயார் ஐக்கிய நாடுகள் சபையின் நமீபியா நிறுவனத்தில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றினார்.
மிஷேல் சிட்னி பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தில் கற்று, கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவராக பணிபுரிகிறார்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் (1997) மருத்துவராகப் பட்டம் பெற்ற மிஷேல் ஆனந்தராஜா மெல்பேண் பல்கலைக்கழகத்தில் (2004) தமது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
லேபர் கட்சி சார்பில் Higgins தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கசாண்ட்ரா பெர்னாண்டோ
தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மெல்போர்னில் உள்ள ஹோல்ட் தொகுதியில் போட்டியிட்ட அவர், அதே தொகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளரான ரஞ்ச் பெரேராவை தோற்கடித்து அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
1988 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த அவர், 1999 இல் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார் அவர், பேஸ்ட்ரி சமையற்காரராகப் பணியாற்றியதுடன், ஆங்கிலம் பேச முடியாத புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு ஆங்கிலம் கற்பித்து வந்துள்ளார்.
அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளம் மற்றும் நியாயமான வேலைகளுக்காகப் போராடிய அவர், சில்லறை மற்றும் துரித உணவுத் துறையில் உள்ள தொழிலாளர்களின் பிரதிநிதியாகவும் செயற்படுகிறார்.
மிஷேல் ஆனந்தராஜாவும் இலங்கை பின்னணியுடையவராக இருந்தாலும், கசாண்ட்ராவே இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.