இந்தோனேசியாவில் டிடாங் பழங்குடியினர் மத்தியில் திருமணம் ஆன தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது.
இந்தோனேசியா நாட்டில் பழங்குடியின மக்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில், இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட எல்லை அருகே வடகிழக்கு பகுதியான போர்னியோ என்ற இடத்தில் டிடாங் பழங்குடியின சமூகத்தினர் வசிக்கின்றனர். டிடாங் என்பதன் பொருள் “மலை மக்கள்” என்பதாகும். இவவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
அவர்களது சமூகத்தில், திருமணம் முடிந்த தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வினோத நடைமுறை உள்ளது. இந்த விதியை மீறினால் அந்த தம்பதிக்கு பயங்கர விளைவுகள் ஏற்படும். திருமண முறிவு, துணைக்கு துரோகம் செய்தல், இளம் வயதில் தம்பதியின் குழந்தைகள் உயிரிழப்பது போன்ற சோகங்கள் ஏற்படும் என்பது பழங்குடியினரின் நம்பிக்கையாக உள்ளது.
அதனால், இளம் தம்பதியை கண்காணிப்பதற்கென்றே சிலர் நியமிக்கப்படுவார்கள். இளம் தம்பதி கழிப்பறையைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக அவர்களுக்கு ஒரு சிறிய அளவு உணவு மற்றும் தண்ணீரை வழங்குவது, யாருக்கும் தெரியாமல் இரகசியமாக கழிப்பறைக்கு செல்லாமல் உண்மையிலேயே சவாலை கடக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதே கண்காணிப்பாளர்களின் பொறுப்பாகும்.
3 நாட்கள் முடிந்த பின்னர், அந்த தம்பதியை குளிக்க வைத்து, கழிவறையை பயன்படுத்த அனுமதி அளித்து விடுவார்கள்.
இந்த சவாலை சந்தித்து அதில் வெற்றி பெறும் தம்பதியின் திருமண வாழ்வே நீடித்திருக்க முடியும் என்றும் அதனை செய்ய தவறுபவர்களுக்கு திருமண வாழ்வில் துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் நம்பப்படுகிறது.
ஒரு ஜோடி சவாலை கடந்ததும், அவர்கள் மகிழ்ச்சியான திருமணத்தை எதிர்பார்த்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்கள் வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
இந்த நடைமுறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது.