பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அண்மையில் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பிரதம நீதியரசருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை கடிதத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பியதுடன், கடிதத்தை அனுப்பிய பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பிரதம நீதியரசர் கூறியதை அடுத்து மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அல்விஸ் தனது அதிகாரத்தை மீறி பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதியமைக்காக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் (ஓய்வு) அல்விஸ், நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களை கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் பொலிசார் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் குறித்து விவாதிக்க பொலிஸ் மா அதிபர் மற்றும் பிற மூத்த பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிரதம நீதியரசரிடம் நேரம் கோரி கடிதம் எழுதியிருந்தார்.
முற்றிலும் தேவையற்ற கடிதத்தை அனுப்பிய பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கடுமையாக எச்சரிக்குமாறு அறிவுறுத்தல்களுடன் தலைமை நீதிபதி கடிதத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.
அதன்படி, தனது அதிகாரத்தை மீற வேண்டாம் என்று அமைச்சின் செயலாளருக்கு சட்டமா அதிபர் முதல் மற்றும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபரின் எச்சரிக்கையை தொடர்ந்து, மேஜர் ஜெனரல் (ஓய்வு) அல்விஸ் மீண்டும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரியுள்ளார்.
ஏற்கனவே அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் சட்டமா அதிபருக்காக எழுதப்பட்டதாகவும், தவறுதலாக தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன், அந்த சம்பவத்திற்காக தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, கவனக்குறைவுக்கு மன்னிப்பும் கோரினார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் நியமனங்களிற்கு வெளியில் இருந்து நியமிக்கப்படுபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த தோல்வி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று இலங்கை நிர்வாக சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோட்டாபய அரசின் ஆட்சிக்காலத்தில் இத்தகைய நியமனங்களிற்கு இராணுவ அதிகாரிகளையே நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.