ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையாகியிருக்கும் பேரறிவாளன், மதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை, நேற்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பைனை வழங்கியது.
பேரறிவாளான் விடுதலைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பேரறிவாளனும் தன் விடுதலைக்காக போராடிய, வலியுறுத்திய தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அந்தவகையில் இன்று மதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வைகோவை, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அதன்பின்னர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேரறிவாளன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பேரறிவாளன், ”நீண்ட காலமாகவே அண்ணனை எனக்கு தெரியும். சிறைக்கு போவதற்கு முன்பே இவரை இதே வீட்டில் சந்தித்து உள்ளேன். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, சரியாக 2000 ஆம் ஆண்டில் அப்போதைய பாஜக தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் சந்தித்து அண்ணன்தான் எனக்காக மனு கொடுத்தார்.
மிகப்பெரிய மனித நேய போராளி இவர். எனது வழக்கை பொறுத்தவரை, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் வந்த பிறகு தான் இது பலராலும் கவனிக்கப்பட்டது. பல மூத்த வழக்கறிஞர்கள், சட்ட அறிஞர்களின் பார்வை இந்த வழக்கை நோக்கி திரும்ப ராம்ஜெத்மலானி தான் காரணம். அவர் இந்த வழக்கில் வர முழு காரணம் வைகோ தான். இவர் இல்லையென்றால் இது சாத்தியம் இல்லை. அதற்காகவே இன்று நான் அண்ணனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். இவையாவும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.