ஏழு ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை பாராளுமன்றத்தில் இருந்து விலகி இருக்குமாறு தலைமை கொறடாவால் அறிவிக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை முதல் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டக்காரணங்களினால் அவரது பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.
அநாகரீகமான தாக்குதல், பதவியை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தை போன்ற சந்தேகத்தின் பேரில் அவரை தடுத்து வைக்கப்பட்டதாக ஸ்காட்லாந்து யார்ட் தெரிவித்துள்ளது.
50 வயதுடைய, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரே கைதாகியுள்ளார்.
லண்டனில் 2002 முதல் 2009 வரை நடந்ததாக கூறப்படும் குற்றம் குறித்து 2020 ஜனவரியில் அறிக்கை கிடைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை முடிவடையும் வரை மேலும் கருத்து எதுவும் தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, கன்சர்வேடிவ் நாடாளுமன்றக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 65 வயதான பிரிட்டிஷ் சட்டமியற்றுபவர் நீல் பாரிஷ், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ஆபாசத்தைப் பார்த்து பிடிபட்டபோது ‘பைத்தியக்காரத்தனமான தருணத்திற்கு’ வருந்துகிறேன் என்று ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றம் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது.
மற்றொரு கன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினர் இம்ரான் அகமது கானும் 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சமீபத்தில் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.



