நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா மோதலில் அதிகம் கவனத்தை ஈர்த்த துறைமுக நகரமான மரியுபோலில் சிக்கியிருந்த 264 உக்ரைனிய இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பலத்த காயமடைந்த 53 வீரர்கள் நோவோசோவ்ஸ்கில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவார்கள். அதே நேரத்தில் 211 பேர் மனிதாபிமான வழித்தடத்தின் ஊடாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் விரைவில் கைதிகள் பரிமாற்றத்தின் ஊடாக நாட்டை வந்தடைவார்கள் என உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது.
துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள பல ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலக்கீழ் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியிருந்த உக்ரைனிய இராணுவத்தினரின் ஒரு பகுதியினரே வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் உக்ரைனில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியான நோவோசோவ்ஸ்க் மற்றும் ஒலெனிவ்காவில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியேற்றப்பட்டதாக உக்ரைனிய துணை பாதுகாப்பு மந்திரி ஹன்னா மாலியார் உறுதிசெய்தார்.
மரியுபோல் இரும்பு ஆலையில் சுமார் 1,000 உக்ரைனிய இராணுவத்தினர் இருந்ததாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரியுபோல் நகரம் ரஷ்யாவிற்கு மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் மிக்க நகரம். உக்ரைன் போரினால் ரஷ்யா நீண்டகால அடிப்படையில் பெற்றுக்கொண்ட முதலாவது நன்மை மரியுபோலை கைப்பற்றியதே.
எனினும், மரியுபோல் ரஷ்யாவிடம் இலகுவாக வீழ்ச்சியடையவில்லை. முற்றுகையிடப்பட்ட நிலையில் 82 நாட்கள் உக்ரைனிய படைகள் போராடின.

மரியுபோல் எதிர்ப்பை ஈடுசெய்ய, உக்ரைன் மீதான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 10% ரஷ்ய படையை மரியுபோலில் குவிக்க வேண்டியேற்பட்டது. இதனால், மற்றைய உக்ரைன் நகரங்களின் மீதான தாக்குதலை ரஷ்யாவினால் எதிர்பார்த்த வேகத்தில் செய்ய முடியவில்லை.
எவ்வாறாயினும், இரும்பு ஆலையில் தற்போது சுமார் 600 உக்ரைனிய வீரர்கள் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் அசோவ்ஸ்டல் பகுதியில் உள்ள அனைத்து வீரர்களையும் மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக மல்யர் கூறினார்.



