பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றுகூடி தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக இந்தியாவின் த இந்து செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரநிலையை அறிவித்துள்ள நிலையில், பன்னாட்டுத் தொடர்புகளைக் கொண்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரில் சில பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உணர முயல்வதாக வெள்ளிக்கிழமை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. .
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்க தாக்குதல்களை திட்டமிடுவதாகவும், யுத்தத்தின் முடிவில் படையினர் மேற்கொண்ட படுகொலைகளிற்கு பழிவாங்க முயல்வதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் மாநில உளவுத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையின் சிறப்புக் குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழு கடல் எல்லையில் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஆபத்து காரணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், ஆழ்கடலிலும், சர்வதேச கடல் எல்லைக் கோட்டிலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அல்லது நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. இலங்கைப் பிரஜைகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்குமாறு கரையோரப் பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடலுக்குச் செல்லும் அனைத்து வீதிகளிலும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்துவதற்காக அனைத்து கடலோர மாவட்டங்களின் பொலிஸ் அத்தியட்சகர்களும் சோதனைச் சாவடிகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனச் சந்தேகிக்கப்படும் அல்லது அதன் முன்னாள் போராளிகளின் செயற்பாடுகளை சமீப வருடங்களாக தமிழ்நாடு அவதானித்து வருகின்றது. கடந்த ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை, சர்வதேச தொடர்புகளுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் செயற்பாட்டாளரான சபேசன் என்ற சற்குணம் என்பவரை கைது செய்தது.
மற்றொரு வழக்கில், செயலற்ற வங்கிக் கணக்கில் கிடக்கும் பெரும் தொகையை மோசடியான முறையில் எடுக்க மும்பை சென்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இலங்கையில் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக நிதி திரட்டும் பணிக்காக அவர் நியமிக்கப்பட்டார் என்பது தெரியவந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் புலிகளின் மீளுருவாக்க செய்தி உண்மையானதா என்பது சந்தேகத்திற்குரியதொன்று என்பது குறிப்பிடத்தக்கது.