சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு தமிழக திரைப்பிரபலங்கள் ஏஆர் ரஹ்மான், நயன்தாரா, மாதவன், தமன்னா ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கென்று சர்வதேச சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மரியாதை உண்டு. இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்வதும், தங்களின் படம் அந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுவதும் சர்வதேச திரைக்கலைஞர்களின் கனவாக இருந்துவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெற இருக்கிற கேன்ஸ் திரைப்பட விழா இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு பெரும் ரசனைக்குரிய விருந்தாக அமைய இருக்கிறது.
இந்தாண்டு 75வது கேன்ஸ் திரைப்பட விழா மே 17ஆம் திகதி தொடங்க இருக்கிறது. அந்த விழாவில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் குழு ஒன்று பங்கேற்க உள்ளது. இதில், பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அக்சய் குமார், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், பாலிவுட் நடிகர் நவாஸூதீன் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் குழு மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறது. அப்போது, இந்தியக் குழுவிற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதேபோல மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரையிடப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.