ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசினால் முஸ்லிம் சமூகமோ எமது கட்சியோ உருப்படியான எந்த நன்மையும் அடையவில்லை என்பதுடன் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பதில் அக்கட்சி பாரிய தவறுகளை செய்து விட்டதால் 2019ம் ஆண்டு முதல் எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் என்பதை மீண்டும் நாட்டு மக்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) அறிவித்துக்கொள்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மஹிந்த ராஜபக்ச நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவராக இருந்த போதும் தனது அருகில் கள்வர்களையும், கொள்ளையர்களையும் வைத்துக்கொண்டிருந்ததால் நாடு அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. கடந்த நல்லாட்சி என்பது முஸ்லிம்களின் 99வீத ஓட்டுகளால் வந்தும் முஸ்லிம் சமூகத்துக்கு அநியாயமே செய்தது. இந்த நிலையில் மஹிந்த தலைமையிலான பெரமுனவுடன் இணையும் படி எமக்கு வந்த அழைப்பை ஏற்று நாம் இணைந்தோம்.
ஆனாலும் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நாம் முற்றாக கைவிடப்பட்டோம். பெரமுனவில் ஒட்டியிருந்த கள்ள முஸ்லிம் தரப்புக்கே முன்னுரிமை கொடுத்தனர். 2019க்கு பின் இன்று வரை பெசில் ராஜபக்ஷ எம்மோடு எந்த சந்திப்பையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் நாம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு அம்சம் கூட நிறைவேற்றப்படவில்லை. மட்டுமன்றி முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைக்ள் நாட்டின் பிரச்சினைகள் பற்றி பல கடிதங்கள் அனுப்பினோம். அவை உதாசீணம் செய்யப்பட்டதோடு நாட்டை கொள்ளையடிப்பதிலேயே ஈடுபட்டார்கள்.
ஆனாலும் நாம் பொறுமை காத்தோம். எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்து தொப்பி பிரட்டி என்ற அவ்ப்பெயர் நம் சமூகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். இப்போது முழு நாடும் இவர்களைப்பற்றி தெரிந்திருப்பதால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து ராஜபக்ஷ கூட்டிலிருந்து விலகி விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.