பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு இன்று காலை பிரதமரை சந்திக்கவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் அல்லது அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பிரதமர் தனது இராஜினாமா தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகுவார் என கடந்த சில நாட்களாக பல தரப்புக்கள் தெரிவித்திருந்தன.
எனினும், பிரதமர் பதவிவிலககூடாதென மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இன்று உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் சுமார் 15,000 பேரை அலரிமாளிகைக்கு அழைத்து வரும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிவிலக கூடாதென வலியுறுத்தி அவர்கள் அலரி மாளிகையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலரை ஜனாதிபதி தரப்பிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இனிமேல் அலரி மாளிகைக்கு வர வேண்டாம், பிரதமர் மஹிந்தவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம், அவரை முடிவொன்றை எடுக்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.