அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் குறித்து தீர்மானம் எடுக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தியதால் நாடாளுமன்றத்திற்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த சர்ச்சையின்போது ஐக்கிய மக்கள் சக்தியினர் செங்கோலை கைப்பற்ற முயற்சித்தனர். செங்கோலை பாதுகாக்க முயன்ற படைக்கல சேவிதரும், பிரதிபடைக்கல சேவிதரும் தரையில் விழுந்தனர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே, நிலையியற் கட்டளையை கணக்கிலெடுக்காமல் அடுத்த வாரமே நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
மதியத்திற்கு பின் ஹேசா விதானகே சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த சமயத்தில், நம்பிக்கையில்லா பிரேரணை திகதி குறித்து ஐ.ம.ச எம்.பிக்கள் கேள்வியெழுப்பினர்.
சபாநாயகரை உடனடியாக சபைக்கு அழைக்குமாறும், அவரை வீட்டுக் காவலில் வைப்போம் என்றும் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்தார்.
இதேவேளை, பாராளுமன்ற நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபையின் நடுவே வந்து போராட்டத்தில் ஈடுட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் சிலர் செங்கோலை எடுக்க முயன்றனர்.
SJB MP’s storm the Speakers office#lka #SriLankaEconomicCrisis pic.twitter.com/jttroroSdW
— Pagetamil (@Pagetamil) May 6, 2022
இதன்போது படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, பிரதிபடைக்கல சேவிதர் குஷான் ஜயரத்னஆகியோர் செங்கோலை பாதுகாக்க முயன்றனர். இருதரப்பும் இழுபறிப்பட்டதில் படைக்கல சேவிதர்கள் தரையில் விழுந்தனர்.
எனினும்,செங்கோலை அவர்கள் விடவில்லை.
இதன் பின்னர் சபாநாயகரின் அறைக்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரவேசித்தது. நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு திகதி குறிக்க வலியுறுத்தியதுடன், பல்கலைகழக மாணவர்கள் மீதான கண்ணீர்ப் புகை பிரயோகத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சபாநாயகரின் அறைக்குள்ளும் கொந்தளிப்பான நிலைமை காணப்பட்டது.
இதையடுத்து, சபைக்குள்பிரவேசித்த சபாநாயகர், பொலிசாரின் கண்ணீர்ப் புகை பிரயோகம் பற்றி பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோரவுள்ளதாக குறிப்பிட்டு, நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும்17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.