மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். ஆனால், அவர்தான் மஹிந்த சரணம் கச்சாமி என ராஜபக்ஸக்களின் பின்னால் திரிந்தவர் என போட்டுடைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க.
பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஒருபோதும் ராஜபக்சக்களை ஆதரிக்கவில்லை. இன்றுவரை அவர்களுக்கு எதிராகவே இருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் 2013 ஆம் ஆண்டு ராஜபக்சக்களை ஆதரித்ததோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து அமைப்பாளர் பதவியையும் பெற்றுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்காக ராஜபக்சக்கள் விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.
இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டும்.
2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார்.
எனவே, மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை, சாணக்கியன் எம்.பியே அவர்கள் பின்னால் சென்றார்.
அவர்தான் அப்போது “மஹிந்த சரணம் கச்சாமி, பெசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி” என்று அவர்கள் பின்னால் சென்றிருந்தார். எனவே, ஏன் சாணக்கியன் எம்.பி என்னைப் பற்றி இவ்வாறு தெரிவித்தார் என்பது புரியவில்லை
அரசாங்கத்தில் இருந்து விலகியதன் பின்னர் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய ரஞ்சித் சியம்பலாபிட்டிய எடுத்த தீர்மானத்தை ஆதரித்தேன். அதற்கு பதிலாக எதிர்க்கட்சியிடமிருந்து பதவியை மீளப் பெறுவதற்கு சபையின் நம்பிக்கையை கோரினார். அது நல்ல முன்னுதாரணமாக அமையும்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு அரசதரப்பிலிருந்துஅல்லாமல், எதிர்க்கட்சியில் இருந்து போட்டியிட்டால், அவரை ஆதரிப்பதாக சியம்பலிபிட்டியவிடம் தெரிவித்தேன் .ஒருமுறை எனது வாக்குறுதியை கொடுத்தபின்னர், அதை மாற்றுவதற்கு எந்த காரணமும் இல்லை.
சியாம்பலாபிட்டிக்கு எதிராக பாராளுமன்றத்தில் தங்களின் பெரும்பான்மையை சோதிக்க அரசாங்கம் விரும்பாததால், அரசாங்கம் ஒரு வேட்பாளரை முன்வைக்காது என்று ஊடகங்கள் மூலம் புதன்கிழமை மாலை அறிந்து கொண்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
மறுநாள் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிர்மல் சிறிபாலவிடம் பேசிய போது அவர் இதை உறுதிப்படுத்தினார். சியம்பலாபிட்டியை சுயேச்சைக் குழு முன்மொழிந்தால் அவருக்கு ஆதரவளிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சியம்பலாப்பிட்டிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள்என்றும் விக்கிரமசிங்கவுக்குத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி இரண்டு குழுக்களும் ஒன்று சேர முடியுமா என்று கேட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வேட்பாளரை நிறுத்தாவிட்டால் தாங்களே போட்டியிடுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துவிட்டது.
அரசாங்கம் வேட்பாளரை நிறுத்தாததால், இரண்டு எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை நிறுத்தலாம். ஆனால் பின்னர் அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், இராசமாணிக்கம் மற்றும் அடைக்கலநாதன் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார். அதேவேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், அனுர திஸாநாயக்க மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் அருகில் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தை எப்படி தீர்க்க முடியும் என்பதுதான் விவாதத்தின் மையமாக உள்ளது என்றார்.
தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ரஞ்சித் மத்தும பண்டார தன்னிடம் முன்வைத்த போது அதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட போது அதற்கு முதலில் ஆதரவை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
சாணக்கியன் தமக்கு எதிராக பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும், அதன் விளைவுதான் தற்போது இந்த பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் மக்கள் அவரது வீட்டை சுற்றி வளைக்கத் தயாராகி வருவதாகவும் ரணில் தெரிவித்தார்.
மக்கள் தமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உரைகளைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்துவது தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயற்பாடுகளை அடுத்து நாடு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி.க்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக போராடி ஒரு நாள் முழுவதையும் வீணடிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சபை கண்டுகொள்ளாமல் போய்விட்டது என்றார்.
மக்களிடம் எரிபொருளோ பணமோ இல்லை, ஜூன் மாதத்திற்குள் நாட்டில் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. பாராளுமன்றம் பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் தவறிவிட்டதாக ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தினார்.
சபையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
நாடாளுமன்றம் மக்களுடன் இருப்பதாக கூற முடியுமா அல்லது பொதுமக்களின் நம்பிக்கை தமக்கு இருப்பதாக கூற முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பது மட்டுமே சபையின் அக்கறையாக இருக்க வேண்டும் என்றார்
அவர்களுக்காக உழைக்கும் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சபை சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நாடாளுமன்றம் பொதுமக்களால் முற்றுகையிடப்படும் என்றும் முன்னாள் பிரதமர் வலியுறுத்தினார்.
இன்றைய நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன், நெருக்கடி தொடர்பாக பாராளுமன்றம் என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறித்து அவர்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.



