விஜே சித்ரா இறப்பதற்கு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து அவரது கணவர் ஹேமந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபல விஜேவான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நசரத் பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை கொண்டார். சித்ரா தற்கொலை கொள்வதற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் ஹேமந்த் என்ற தொழில் அதிபரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார்.
பெப்ரவரி மாதம் விமரிசையாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நிலையில்தான் தனது கணவரோடு தங்கியிருந்த போதே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.
சித்ரா தற்கொலைக்கு பிறகுதான் அவருக்கு பதிவு திருமணம் நடைபெற்ற தகவலே தெரிய வந்தது. இதையடுத்து சித்ரா மரணம் தற்கொலை அல்ல, ஹேமந்த்தான் கொன்று விட்டார் என சித்ராவின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சித்ரா மரணத்திற்கு காரணமானவர்களால் தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் ஹேமந்த்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த், சித்ரா மரணத்திற்கு பின்னால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் அனைத்தையும் சொல்ல தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் பெரம்பலூர் கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது எக்ஸ் எம்எல்ஏவால் சில விஷயங்கள் நடந்ததாகவும், சித்ரா இறப்பதற்கு முன்பு தன்னிடம் கூறியதை போலீஸிடம் நிச்சயம் கூறுவேன் என்றும் தெரிவித்தார்.
இதனால் சித்ரா வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹேமந்த், சித்ரா இறப்பதற்கு முன்பு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் ஷூட்டிங் முடிந்து 1.30 மணிக்கு சித்ரா ஹோட்டல் அறைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். வந்ததில் இருந்தே ஷாக்காகவே இருந்தார், ஏதோ ஒரு யோசனையில் இருந்தார் என்றும் ரோட்டையே வெறித்து பார்த்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஏற்கனவே சில அரசியல் பிரமுகர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளை கூறிய சித்ரா அன்று இரவும் அறைக்கு வந்த பிறகு அதைப்பற்றி பேசி வருத்தப்பட்டார் என்றார். அப்போது சித்ராவுக்கு ஆறுதலாக தான் பேசியதாகவும், அறைக்கு வெளியில் இருந்த புல்வெளியில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார் ஹேமந்த். ஆனால் தான் பேசியது எதையுமே சித்ரா காதில் வாங்கவில்லை என்றும் தொட்டபோது கூட அவர் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் சித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தான் வெளியே அமர்ந்துவிட்டதாகவும் சித்ரா உள்ளே சென்றதால் குளிக்கப்போகிறார் என்று நினைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஹேமந்த்.
பின்னர் 5 நிமிடம் கழித்து உள்ளே சென்றபோது கதவு பூட்டியிருந்தது என்றும் சித்ராவின் முனகல் சத்தம் மட்டும் கேட்டது என்றும் கூறியுள்ளார். இதனால் அழுகிறார் என்று நினைத்து வரவேற்பு அறையில் மற்றொரு சாவி வாங்க சென்றதாகவும் கூறியுள்ளார் ஹேமந்த்.
தனக்கு காலில் அடிபட்டு இருந்ததால் ஹோட்டல் ஊழியர்தான் வந்து கதவை திறந்தார் என்றும், அவர்தான் சித்ரா தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்து ஷாக்கானார் என்றும் கூறியுள்ளார். அப்போது கூட சித்ரா பேய் வேஷம் போட்டு பயமுறுத்துகிறார் என்றும் தூக்கில் தொங்குவது போல் விளையாடுகிறார் என்றே நினைத்ததாகவும் கூறியுள்ளார் ஹேமந்த். சித்ரா அறைக்கு வந்த அறை மணி நேரத்திற்குள்ளேயே இவையெல்லாம் நடந்து முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
சித்ராவுக்கு தொல்லை கொடுத்தது அரசியல்வாதிகள், மீடியா மற்றும் ஈவன்ட்ஸ் நடத்துபவர்கள் என்று கூறியுள்ள ஹேமந்த் யார் தொல்லை கொடுத்தது, சித்ரா கூறிய விஷயம் என்ன என்பதை கூற மறுத்துவிட்டார். மேலும் பணப் பிரச்சனை மற்றும் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகள்தான் சித்ரா மரணத்திற்கு காரணம் என்றும் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.