அரசாங்கத்திலிருந்து விலகிய 11 சுயாதீன அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அரச தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பிரேரணை அர்த்தமற்றது என கூறினார்.
ஜனாதிபதி இல்லாமல் நாட்டை ஆள முடியாது எனவும் கூறினார்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக ஜனநாயக இடதுசாரி முன்னணி வாக்களிக்காது என தெரிவித்தார்.
மற்ற 10 அரசியல் கட்சிகளும் இதே கருத்தைக் கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் எனினும் ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதும், புதிய பிரதமர் நியமிக்கப்படுவதும் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான குறைந்தபட்ச தேவையாக இருக்கும் என தேரர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வசதியாக பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ரத்தன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 11 சுயேச்சைக் கட்சிகள் வாக்களிக்குமா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, பிரதமர் ராஜபக்ஷ பதவி விலகினால் பிரேரணை தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைப்பது குழந்தைகளின் விளையாட்டு என்றும் கூறினார்.
அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டால் 113 பெரும்பான்மைக்கு மாறாக 120 பெரும்பான்மையைப் பெற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில கருத்து தெரிவித்துள்ளார்.