ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முழு அமைச்சரவையும் உடனடியாக பதவிவிலக வேண்டுமென ஈ.பி.டி.பியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் இன்றைய அமர்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் கருப்புப் பட்டி அணிந்து சபைக்கு வந்திருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.பக உறுப்பினர்கள் கருத்து தெரவித்த போது,
இந்த நாட்டினுடைய அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும். இந்த ஆட்சியில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் சிறீததர் தியேட்டர் மின்சாரக் கட்டணம் இரண்டு கோடியை செலுத்தினாலே இந்த நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு ஒரு தொகை நிதி கிடைத்து விடும் என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அத்துடன், ஜனாதிபதி, அமைச்சரவை பதவிவிலகும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து ஈபிடிபி மற்றும் பெரமுன கட்சியினர், இதனை அரசியல் செய்யாதீர்கள் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
எனினும், கூட்டமைப்பு தரப்பு அதை ஏற்கவில்லை. இந்த தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுங்கள், தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றுவதற்கு எதிராக வாக்களிப்பவர்களை மக்கள் அடையாளம் காண்பார்கள் என தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்தத் தீர்மானத்தினை சபையின் உறுப்பினர் அருளானந்தன் ஸ்ரீ பத்மராசா முன்மொழிய சுவாமிநாதன் பிரகலாதன் வழிமொழிந்து நிலையில் இந்த நாட்டினுடைய ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் ஏகமனதாக பதவி விலக வேண்டுமென தெரிவித்து சபையில் குறித்த தீர்மானத்தினை சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி வாசித்தார்.
வேலணை பிரதேசசபையை ஈ.பி.டி.பி கட்சியே ஆளுகை செய்கிறது.
மேலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் கறுத்தப்பட்டி அணிந்து வந்திருந்தும் குறிப்பிடத்தக்கது .
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எட்டு பேரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 6 உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினருமென மொத்தமாக 20 உறுப்பினர்களும் இந்த பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி இது அரசு விலக வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னெடுத்து நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.