அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், ஐக்கிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்குத் தயாராகி பல வாரங்கள் கடந்துவிட்டதாகவும், இப்போது அதைச் செய்வதற்கான உற்சாகம் அவர்களிடம் இல்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதா என நாங்கள் சந்தேகிக்கிறோம். பெரும்பான்மை மக்களின் கோரிக்கையின்படி அரசாங்கத்தை வெளியேற்றி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னணியில் சில இரகசியத்தன்மை இருப்பதாக நான் உணர்கிறேன் என்றார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆர்வத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறிய அவர், சஜித் பிரேமதாச தற்போது அதற்கு எதிராக பேசுவதாகவும் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தில் யார் பிரதமராக வருவார்கள் என்பது பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் ஆனால் இந்த அரசாங்கத்தை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் விரும்புவதாகவும் வாசுதேவ கூறினார்.