அமெரிக்காவில் தனது திருமண விருந்தில், கஞ்சாவைக் கலந்த சந்தேகத்தின் பேரில் மணமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனால் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர் பலர், அதிவேக இதயத் துடிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரிட்டது.
உணவில் கஞ்சாவைக் கலந்ததாக, மணமகளும் விருந்துணவை விநியோகித்தவரும் கைது செய்யப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்தபெப்ரவரி மாதம், ஃபுளோரிடா மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
டான்யா மற்றும் ஆண்ட்ரூ ஸ்வோபோடா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களே பாதிக்கப்பட்டனர். திருமண விருந்தில் கலந்து கொண்டவர்கள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு முறையிட்டதை தொடர்ந்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
மணமகள் சம்மதத்தோடு, விருந்தினர்களுக்கு வழங்கப்படும் உணவில் உணவு விநியோகிப்பாளர் கஞ்சாவைக் கலந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
டான்யா ஸ்வோபோடா (42) மற்றும் உணவு வழங்குபவர் ஜாய்செலின் பிரையன்ட் (31) ஆகியோரே குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்கள்.
கஞ்சா விநியோகம், கவனக்குறைவு, தடயங்களை அழிக்க முயன்றது-ஆகிய குற்றச்சாட்டுகள், மணமகள் மீது நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மணமகள் மற்றும் உணவு வழங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் 5,000 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் என்று செமினோல் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.