நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஆளும் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பான மகஜரை கையளித்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவில் இருந்து பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரியவருகிறது.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்களும் மனசாட்சிக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.