பிரபல கால்ப்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
ரொனால்டோவின் மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்ப்பதாக ரொனால்டோ ஜோடி தெரிவித்திருந்தது.
இரட்டைக்குழந்தைகள் பிறந்த நிலையில் அதில் மகன் இறந்துவிட்டதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார். பெண்குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘எங்கள் ஆண் குழந்தை இறந்துவிட்டதை ஆழ்ந்த சோகத்துடன் தெரிவிக்கிறேன்.
எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனிப்பு மற்றும் ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்த இழப்பில் நாங்கள் அனைவரும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம், இந்த கடினமான நேரத்தில் தனிமையை கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மகனே, நீ எங்கள் தேவதை. நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.
— Cristiano Ronaldo (@Cristiano) April 18, 2022