நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் நன்றாக அமையவில்லை, நெட்டிசன்கள் அனைவரும் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற சோகத்தை போக்க, இளைஞர்கள் மூவர் விடுதியில் அறையெடுத்து, மது அருந்தியுள்ளனர்.
மதுபோதையின் உச்சத்தில் விடுதி சொத்துக்களிற்கு சேதமேற்படுத்திய அவர்கள் ‘முறையாக கவனிக்கப்பட்ட’ பின்னர், சேதத்திற்கான பணத்தை செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு நகரை அண்மித்த விடுதியொன்றில் கடந்த 13ஆம் திகதி இரவு இந்த சம்பவம் நடந்தது.
20 வயதான இளைஞர்கள் மூவர் அன்று மாலை விடுதி அறையை பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 2,000 ரூபா பணம் செலுத்தியுள்ளனர். இளைஞர்களில் இருவர், வர்த்தகர்களின் மகன்களாவர்.
மூன்று இளைஞர்களும் மாலை 4 மணியிலிருந்து அறையில் மது அருந்தியுள்ளனர்.
இரவு 7.45 அளவில் விடுதி அறை யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு, பணியாளர் ஒருவர் அங்கு சென்றுள்ளார்.
இதன்போது, ஒரு இளைஞன், பீஸ்ட் படம் நன்றாக இல்லையென கூறி, தேம்பித்தேம்பி அழுதுள்ளார். மற்றைய இருவரும், அறைக்குள்ளிருந்த பொருட்களை உடைத்துள்ளனர்.
பணியாளரையும் தாக்க முற்பட்ட போது, அவர் தப்பியோடியுள்ளார். அறைக்கு வெளியில் வந்த இரண்டு இளைஞர்கள், பீஸ்ட் படத்தை திட்டியபடி, அருகிலுள்ள அறைகள் இரண்டின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
பணியாள் தொலைபேசி மூலம் வழங்கிய தகவலையடுத்து, உரிமையாளரும், சில நண்பர்களும் அங்கு வந்து, இளைஞர்களை பிடித்து, ‘முறையாக கவனித்துள்ளனர்’.
அந்த கவனிப்பில் போதை தெளிந்த இளைஞர்கள், பீஸ்ட் படம் நன்றாக இல்லையென்ற சோகத்தை ஆற்ற, ரூம் போட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களின் பெற்றோர்களிற்கு தகவல் வழங்கப்பட்டது. இளைஞர்கள் சேதமாக்கிய சொத்துக்களிற்கான இழப்பீட்டை தருவதாக வர்த்தகர்கள் கூறியதையடுத்து, சுமுகமாக பிரச்சனை முடிக்கப்பட்டது.
புதுவருடத்தை முன்னிட்டு நண்பர்கள் குழு சிகிரியாவிற்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டே, மூவரும் விடுதியில் ஒன்றுகூடியது தெரிய வந்துள்ளது.