காலி முகத்திடல் மக்கள் போராட்டம் நடுநிலையானதாக இருந்தால் நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, தற்போது சில அரசியல் கட்சிகள் போராட்டத்தை தமது சொந்தமாக்க முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் நாட்டின் நலனுக்காக சாதகமான ஒன்றைக் கோருவதாகவும், அவர்கள் அரசியலால் பிளவுபடவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றி பொய் சொல்லும் சம்பவங்கள் ஏராளமாக உள்ளது என்றார்.
எவ்வாறாயினும், இவ்வாறான நபர்கள் ஜனாதிபதியாகவும் அரசாங்கங்களாகவும் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எனவும், எனினும் இன்று பொதுமக்கள் மாற்றத்தை கோருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இன்று பொதுமக்கள் நடுநிலைக் கண்ணோட்டத்தில் நாட்டிற்கு எது நல்லது என்று கோருவதாகவும், நீதியை நிலைநாட்ட மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் திஸாநாயக்க கூறினார்.