26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
சினிமா

திரைவிமர்சனம்: பீஸ்ட்

முஸ்லிம் தீவிரவாதி உமர் ஃபாருக்கை கைது செய்து அழைத்துவரும் ஸ்பெஷல் ஆபரேஷனில் ஈடுபடுகிறார் ‘ரா’ பிரிவு ஏஜெண்ட் வீரராகவன். கைது செய்யப்பட்ட உமர் பாரூக்கை விடுவிக்க வலியுறுத்தி மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். மக்களை வீரராகவன் (விஜய்) மீட்டாரா? அவர் கையாண்ட உத்திகள் என்னென்ன? கைது செய்யப்பட்ட உமர் ஃபாருக் என்ன ஆனார்? – இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘பீஸ்ட்’.

வீரராகவனாக விஜய். படத்துக்கு படம் வயதைக் குறைக்கும் மேஜிக்கை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார். அதே ஃபிட்னஸுடன் மிடுக்கும் கூடிக்கொண்டே செல்கிறது. தனது லுக்கில் ரசிகர்களைக் கவரும் விஜய், எனர்ஜியுடன் நடனக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். ஒட்டுமொத்த படத்தையும் ‘ஒன்மேன் ஆர்மி’யாக சுமந்து செல்கிறார். என்ன நடந்தாலும் பெரிய அளவில் முகத்தில் உணர்ச்சிகளை வெளிபடுத்தாத ஒரு கதாபாத்திரத்தில் பக்குவமாக வலம் வருகிறார்.

பிரீத்தியாக வரும் பூஜா ஹெக்டேவுக்கு விஜய்யை காதலிப்பதைத் தாண்டி பெரிய வேலை இல்லை. சிலசமயம் எதிரிகளை அடிக்க ‘டூல்’ ஆகவும் பயன்படுகிறார். அழகிலும், நடனத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பூஜா.

சில காட்சிகள் மட்டுமே வந்து செல்லும் அபர்ணா தாஸ் கவனம் பெறுகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ கதாபாத்திரங்களுக்கு பெரிய ஸ்கோப் இல்லாதது ஏமாற்றம். விஜய்யை புகழ்வதையே தனது பார்ட் டைம் வேலையாக செய்கிறார் செல்வராகவன். மற்றபடி விடிவி கணேஷின் ‘ராமா கொஞ்ச இர்ரா காமா’ போன்ற டைமிங் காமெடிகள் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கின்றன. அதேசமயம், யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ் லீ-க்கு நெல்சனின் முந்தையப் படங்களைக் காட்டிலும், இந்தப் படத்தில் முக்கியத்துவம் குறைவுதான்.

முதல் பாதி முழுவதும் காமெடி, காதல், அவ்வப்போது வரும் சண்டைக் காட்சிகள் என கமர்ஷியல் சினிமாவுக்கே உண்டான பாணியில் படம் நகர்கிறது. சலிப்பை ஏற்படுத்தாத திரைக்கதை மூலம் முதல் பாதியை சிறப்பாகவே கொண்டுசென்றிருக்கிறார் நெல்சன். இரண்டாம் பாதியில் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய இடத்தில் தடுமாற்றம் தெரிகிறது. தீவிரவாதிகளை டம்மி செய்து, நாயகனுக்கான வெயிட்டை கூட்டிருப்பது, படத்தில் சுவாரஸ்யமில்லா போக்கை உருவாக்கியிருக்கிறது.

ஷைன் டாம் சாக்கோ போன்ற நல்ல நடிகரை பயன்படுத்தாமல் வீணடித்திருப்பது, காதபாத்திரங்களை எழுதிய விதத்தில் சொதப்பிருப்பதை உணர முடிகிறது. உமர் ஃபாருக் கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலுக்கு கொஞ்சம்கூட பொருந்தாத தேர்வு. முகமூடி அணிந்து பில்டப் கொடுக்கும் தீவிரவாதி குழுவின் தலைவன் எந்த விதத்திலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கவில்லை.

மத்திய உள்துறை அமைச்சரை அவ்வளவு அசால்ட்டாக அதிகாரி டீல் செய்வது, ஒரு மாலில் சிறைபிடிக்கபட்ட பணயக்கைதிகளுக்காக, தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் முக்கியமான தீவிரவாதி ஒருவரை விடுவிக்க அரசு முடிவெடுப்பது கதையின் கனத்தை குறைத்திருக்கிறது. விஜய் மாலுக்குள் கார் ஓட்டுவது, ஒரே கத்தியை வைத்துக்கொண்டு தீவிரவாதிகளின் துப்பாக்கிளுக்கு டஃப் கொடுப்பது, இரண்டு இரும்புக் கதவில் ஒளிந்துகொண்டு எல்லா தீவிரவாதிகளையும் துவம்சம் செய்வது, சில காட்சிகளில் விஜய்க்கு உதவுவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கிகள் இல்லாமல் கத்தியுடன் வந்து சண்டையிடுவது என கமர்ஷியலுக்கு லாஜிக் தேவையில்லை என்றாலும், காட்சிகளுடன் ஒட்ட முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு தனியாளாக சென்று தீவிரவாதியை மீட்டு, போர் விமானத்தில் நாடு திரும்வுது, இந்திய அரசாங்கமே விஜய் சொல்லுக்கு கட்டுப்படுவது, உள்துறை அமைச்சரை உள்ளூர் அரசியல்வாதி போல டீல் செய்வது… அவ்வ்வ்வ்… கொஞ்சம் லாஜிக்கிற்கு கருணை காட்டியிருக்கலாமே நெல்சன்?!

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தனித்து தெரிகின்றன. குறிப்பாக கத்தியால் விஜய் ஸ்கீரினை கிழிக்கும் ஃப்ரேம். பைக் ஓட்டும் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என கேமராவில் விருந்து படைத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசை ஓகே. ஜானி மாஸ்டரின் நடனம் பாடல்களுக்கு உயிரூட்டுகிறது.

மொத்ததில் கதையைத் தவிர்த்து, காமெடியின் துணையுடன் விஜய்யை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட’மாஸ் என்டர்டெயினர்’ திரைப்படமாக எஞ்சி நிற்கிறது ‘பீஸ்ட்’.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment