புடினை போர்க் குற்றவாளி என்று பகிரங்கமாக குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தற்போது ரஷ்யா இன அழிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைனின் மரியுபோல் துறைமுக நகரைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா பாலியல் பலாத்காரங்களை ஒரு போர் உத்தியாகவே பயன்படுத்துவதாக உக்ரைனும், அமெரிக்காவும் குற்றச்சாட்டுகின்றன. அத்துடன், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டின. எனினும், இரசாயன ஆயுத குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை. இதனால், வழக்கமான குற்றச்சாட்டாக இது மாறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அயோவா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜனாதிபதி பைடன், “உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்துவது நிச்சயமாக இன அழிப்பு தான். இதை சர்வதேச ஆய்வுகளுக்கு உட்படுத்தி சட்டத்தரணிகள் மூலமே சட்டபூர்வமாக உறுத்திப்படுத்த வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது இன அழிப்பு என்றே தோன்றுகிறது. உக்ரைனியர்களே இருக்கக் கூடாது என்பது தான் புடினின் எண்ணமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, “இது ஒரு உண்மையான தலைவரிடமிருந்து வந்துள்ள உண்மையான வார்த்தைகள்” என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதியன்று ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைனில் ரஷ்ய இனத்தவர்கள் மீது உக்ரைன் இனஅழிப்பை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி இந்த போரை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.