வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கின்ற வளங்களை சூறையாடுகின்ற நிலங்களை எந்த விதத்திலும் பயனற்ற நிலங்களாக ஆக்குகின்ற இன அழிப்பினுடைய ஒரு அம்சமாக பொருளாதாரத்தை வளங்களையும், நிலத்தையும், அழிக்கின்ற செயற்பாடாக வாகரையில் இறால் பண்ணை அமைப்பதற்கான செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் ஆகிய வேலன் சுவாமி தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வேலன் சுவாமி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இறால் பண்ணை அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவது தொடர்பாக அதனைத் தடுத்து நிறுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மக்களுடன் கலந்துரையாடிய பின்பு குறித்த திட்டம் மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
வாகரையில் இயற்கை எழில் சூழ்ந்த குறித்த இடமானது எதிர்வரும் காலங்களிலே தனி நபர்களது சுய இலாபத்திற்காகவும் சிங்கள பேரினவாத அரசு வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கின்ற வளங்களை சூரையாடுகின்ற நிலங்களை எந்த விதத்திலும் பயனற்ற நிலங்களாக ஆக்குகின்ற இன அழிப்பினுடைய ஒரு அம்சமாக பொருளாதாரத்தை வளங்களையும்,நிலத்தையும்,அழிக்கின்ற செயற்பாடாக வாகரையில் இறால் பண்ணை அமைப்பதற்கான செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுமானால் வளங்கள் அழிக்கப்பட்டு எங்களது உறவுகளின வாழ்வாதரங்கள் எத்தனையோ குடும்பங்களின் வருமானங்கள் இழக்கின்ற சூழ் நிலை உருவாகின்றது.
இங்கு மேச்சல் தரையில் கால் நடைகள் மேய்கின்றன.பல பறவையினங்கள் குறிப்பிட்ட காலப் பகுதியிலே வெளிநாடுகளிலே இருந்து வந்து அவை ஓய்வெடுத்து இனம் பெருக்கி செல்கின்ற இயற்கை அற்புதமான ரம்மியமான சூழல் காணப்படுகிறது.மரங்களை எடுத்துக்கொண்டால் பழம் தரும் மரங்களான பாலை வீரை,மதுர மரங்கள் என பல மரங்கள் காணப்படுகிறது.இவை அழிக்கப்படுமிடத்து இயற்கை சூழல் பாதிக்கப்படவுள்ளது.
ஆற்றினை நம்பி பல குடும்பங்கள் தங்களது தொழினை முன்னெடுக்கின்றனர்.இறால் பண்ணை அமைக்கப்படுமானால் ஆற்றினுடைய வளங்கள் சூறையாடப்பட்டு இரசாயனங்கள் எல்லாம் பாவிக்கப்படும் போது ஆற்று நீர் உவர் நீராக மாறி இரசாயனமயமாக ஆகக் கூடிய தன்மைகள் இருக்கின்றன.விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்;கூடிய தன்மைகள் உள்ளன. அதுமட்டுமல்ல இங்கிருக்கின்ற புற்கள் எல்லாம் கொழுப்பு நிறைந்த புற்களாக இருக்கின்ற அடிப்படையிலே கால் நடைகள் எல்லாம் இவற்றை மேயும் பொழுது அவற்றில் இருந்து கிடைக்கின்ற பால், கொழுப்பு நிறைந்த பாலக இயற்கை உணவாக எல்லோருக்கும் கிடைக்கிறது.
இந்த சூழல் இயற்கை எழிலான சூழல்.ஒரு பகுதி உப்பு நிலமாகவும்,ஒரு பகுதி சதுப்பு நிலமாகவும்,விவசாய நிலமாகவும் அனைத்தும் கலந்திருக்கக் கூடிய எங்களது தாயகத்தினுடைய அற்புதமான இயற்கை வளத்தை எடுத்துக் காட்டுகின்ற நிலமாகவுள்ளது.
இந்த நிலத்தை இறால் பண்ணை அமைத்து சர்வதேச ரீதியிலே பல வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்து முதலாளியாக ஏற்கனவே இருகின்றவர்களை மேலும் முதலாளியாக ஆக்குகின்ற செயற்பாடாகும்.
எங்களுடைய மண்,எங்களுடைய மக்கள், எங்களுடைய வளங்கள் இவற்றை எங்களுடைய மக்கள் பயன்படுத்தி இங்கு இருக்கக் கூடிய மேச்சல் தரையாக இருக்கலாம், கால்நடையாக இருக்கலாம், ஆற்று மீன்பிடியாக இருக்கலாம், விவசாயமாக இருக்கலாம், பழங்களை பிடுங்கி விற்பனை செய்யும் வாழ்வாதரமாக இருக்கலாம், இவ்வாறான பல பொருளாதார இயற்கையாக இங்கு அமைந்திருக்கின்ற வளங்களை எங்களுடைய மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய சரியான வழிகாட்டலையும் பொருளாதார உதவிகளையும் நீர் வளங்களையும் கொடுத்து அதனூடாக வாழ்வாதாரத்தை வழங்குகின்ற முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுதான் எங்களது வேண்டுகோள்.
இங்கிருக்கின்ற வளங்களையும்,மக்களுடைய வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ளாமல் மக்களையும், நிலத்தையும் ஒட்டுமொத்தமாக தமிழினத்தை அழிக்கின்ற செயற்பாடாக இந்த இறால் பண்னை அமைக்கின்ற செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. மக்களது உணர்வுகளை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள் ஆர்பாட்டங்கள், கையெழுத்து போராட்டங்கள் செய்திருக்கின்றார்கள். இதற்கான தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றார்கள்.
ஆகவே அந்த எதிர்ப்பிலும் சட்டரீதியான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம்.
எங்களுடைய அரசியல்வாதிகள் எவரும் இதற்காக குரல் கொடுத்ததாகவில்லை. சிறிலங்கா அரசுடன் இணைந்திருக்கக் கூடிய தமிழ் அரசியல் வாதிகள் இதற்கு உடன்பாடாகவுள்ளனர்.தங்களது சுயலாப நோக்கத்திற்காக ஏதோ ஒரு வருமானத்திற்காக எங்களது தாயகத்தை பாதிக்கின்ற செயற்பபாடகவுள்ளது.
இந்த செயற்பாட்டை வடக்கு கிழக்கு தாயக பூமி என்பது எத்தனையோ மாவீரர்களுடைய தியாகத் தலம் எத்தனையோ பொது மக்களது அர்ப்பணிப்பாலும் ஒரு தலைமைத்துவ வழிகாட்டலாலும் வழிகாட்டப்பட்ட இந்த மண் இவ்வளவு அர்ப்பனிப்புக்கள் இவ்வளவு தியாகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த பூமியிலே இப்படியான செயற்பாட்டை மேற்கொள்வதென்பது எங்களது நெஞ்சை குத்தி கிழித்து இரத்தம் வரச் செய்யும் செயற்பாடாகத்தான் எங்கள் தமிழ் அன்னை ஈழத் தாய் மனவேதனைப்படுகிறாள்.
ஆகவே தமிழர்கள் என்ற வகையிலே எங்கள் இனத்தின் மீது வைத்துள்ள உணர்வுகளை இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்த வேண்டும்.அந்த வகையிலே அரசுடன் இணைந்திருக்கின்ற அரசியல் வாதிகள் தங்களது எதிர்ப்பையும் அரசிற்குள்ளே இருந்து கொண்டு வெளிப்படுத்த வேண்டும்.அப்பொழுது எங்களுடைய மக்கள் வடக்கு கிழக்கு எங்களுடைய தாயகம் என்கின்ற அடிப்படையிலே போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய நிலை ஏற்படும்.
அந்தப் பின்னனியிலே வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற மக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்களை பார்கின்ற போது சிறிலங்க அரசு தென்னிலங்கையிலே ஒரு நீதி வடக்கு கிழக்கிலே இந்னொரு நீதியாகவுள்ளது.இரு நாடுகள் என்ற கருத்தியலை நோக்கித்தான் நாங்கள் நகர்கின்றோம்.
எங்களது வளங்கள் சுரண்டப்பட்டு இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் நாங்கள் எங்களுக்குரிய தலைவிதியை நாங்களே தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
எங்களுடைய தமிழ் இனத்திற்கு புலம் பெயர் தேசத்தில் தமிழ் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நிதி வளங்கள் இருக்கின்றன. நாங்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயங்கம் உட்பட மக்கள் இயக்கங்கள் அமைப்புக்கள் என சிவில் அமைப்புக்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைப்பு பணியினை முன்னெடுத்து வருகின்றோம். புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகளின் நிதியை பெற்று இங்கிருக்கின்ற வளங்களை அபிவிருத்தி செய்து எங்களுடைய மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். இதனையே நாங்கள் சர்வதேச சக்திகளிடம் கேட்கின்றோம். அண்டை நாடான இந்தியாவாக இருக்கட்டும் சர்வதேச கட்டமபை;புக்கள் கொண்ட ஜக்கியநாடுகள் சபையாக இருக்கட்டும். சர்வதேச நாடாக இருக்கட்டும் மனித உரிமை அமைப்புக்களாக இருக்கட்டும் அனைவரிடமும் ஒட்டுமொத்த சர்வதேசத்திடமும் நாங்கள் விடுக்கின்ற வேண்டுகோள் எங்களது இனத்திற்கான தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்றோம். எங்களுடைய அரசியல் பொருளாதாரத்தை நாங்களே தீர்மானிக்கின்றோம்.அடிப்படை சுயநிர்ணய உரிமை அடிப்படையிலே எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.
எங்களது தாயகத்தின் விடுதலை நோக்கிய பயணத்திலே பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எங்களுடைய மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கட்டும். அதுவரைக்கும் இடைக்கால ரீதியிலே வடக்கு கிழக்கிற்குரிய நிர்வாக கட்டமைப்பை எங்களிடம் தாருங்கள் நாங்கள் அதனை சிறப்பாக செய்கிறோம். வடக்கு கிழக்கிற்கென ஒரு தனியான நிதியத்தினை உருவாக்கி நிதி வளங்களை திரட்டி இங்கு நாங்கள் பல அபிவிருத்திகளை செய்கிறோம்.
இறால் பண்ணை அமைப்பது என்பது அபிவிருத்தியே கிடையாது பணக்காரர்களாக இருக்கின்றவர்களை இன்னும் பணக்காரர்களாக மாற்றுகின்ற செயற்பாடாகும். அபிவிருத்திக்கு எதிரானதொரு செயற்பாடகவே நான் கருதுகிறேன்.
எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்கின்ற இந்த இன அழிப்பு எங்களது தற்சார்ப்பு கொள்கையை குலைய வைக்கின்ற செயற்பாடாகும்.
இந்த செயற்பாடுகளுக்கு எங்களுடைய ஈழத் தமிழ் உறவுகள் ஒரு போதும் துணை நிற்கக் கூடாது.இதனை எதிர்க்க வேண்டும் எங்களை நாங்களே ஆழுகின்ற பொருளாதாரத்தை வளர்கின்ற நிலைக்கு எங்களை விடுங்கள்.எங்களை அபிவிருத்தி செய்து கொண்டு எங்களது அயல் நாடான சிறிலங்காவிற்கும் உதவி செய்கின்றோம்.
எங்களுடைய மக்கள் விழிப்படைந்து ஒன்றுபட்டு செய்ற்பட்டால் உலகத்தில் உள்ள எந்த சக்தியாலும் தடுத்துவிடமுடியாது என்றார்.
– ருத்ரா-