வவுனியா வடக்கு, புளியங்குளம் பகுதியில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியினை தனிநபர் ஒருவர் கையகப்படுத்த முயல்வதாக தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது புளியங்குளம், கல்மடு சந்திப் பகுதியில் நேற்று (12) இடம்பெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம், கல்மடு பகுதியில் உள்ளய அரச காணி ஒன்று கடந்த 80 வருடங்களுக்கு மேலாக பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதனை தனிநபர் ஒருவர் அபகரிக்க முயற்சி எடுத்துள்ளதாகவும், குறித்த பகுதியில் யுத்தததிற்கு முன்னர் நெல் களஞ்சியசாலை, நூலகம், தபாலகம் என்பன காணப்பட்டதாகவும் தற்போது பொது தேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
குறித்த கையகப்படுத்தும் முயற்சி கடந்த 10 தினங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் நிலையில் அப் பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்ற போது அதனை தடுத்து நிறுத்த குறித்த காணியில் நோட்டீஸ் ஒட்டுவதாக பிரதேச செயலகத்தினர் தெரிவித்த போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதனால் தொடர்ந்தும் காணியை கையகப்படுத்தும் முயற்சி இடம்பெற்றதையடுத்து மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து புளியங்குளம் பொலிசார் குறித்த காணியினை கையகப்படுத்தும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அத்துடன், மக்கள் எதிர்ப்பையடுத்து பிரதேச செயலாளராலும் புளியங்குளம் பொலிசில் குறித்த காணி கையகப்படுத்தலுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.