27 C
Jaffna
December 29, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கை திவாலாகிறதா?: வெளிநாட்டுக்கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியது!

பல்வேறு நாடுகளில் வாங்கிய கடன் உட்பட வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிதி அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடன் கொடுத்த நாடுகள், வங்கிகள் கடனுக்கான வட்டித் தொகை மறு கடனாக வைத்துக் கொள்ளலாம் அல்லது இலங்கை ரூபாயில் திருப்பிச் செலுத்த மட்டுமே முடியும் எனவும் அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை தொடர்ந்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் ஆண்டுதோறும் வெளிநாட்டுக்கடன் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 3 பில்லியன் டொலராக உள்ளது.

இதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டொலர் சர்வதேச தங்கப்பபத்திர கடன் உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

ஒருபுறம் கடும் கடன் கழுத்தை நெறித்தாலும் அன்றாட செலவுகளுக்கும், பெட்ரால், டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்தியாவிடம் கடன் வாங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கைக்கு ஜனவரி முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் மற்றும் 500 மில்லியன் அமெரிக்க டொலரில் கடன் வழங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் உதவி வழங்கவும் உறுதியளித்தள்ளது. கடந்த மாதம், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியாவுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்தப்படி ஜூலை மாதத்துக்குள் இலங்கை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை பெரிய அளவில் உள்ளது. இந்த தொகை இலங்கையின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டதாக மத்திய வங்கி ஏற்கெனவே கவலை தெரிவித்து இருந்தது. குறிப்பாக சீனாவிடம் பெற்ற கடனுக்கான வட்டியுடன் ஜூலையில் ஒரு பகுதியை செலுத்த வேண்டிய நிலையில் சீனா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் ஒட்டுமொத்தமாக வெளிநாடுகள், வங்கிகள், சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் மொத்தமாக உள்ள 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை தற்போதைய நிலையில் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மிகவும் அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணி மொத்தமாக தீர்ந்துவிட்டதால் இந்த நடவடிக்கையை இலங்கையின் கடைசி முயற்சி என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மிகவும் அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணியும் தீர்ந்துள்ளது. எனவே வெளிநாடுகள் உட்பட இதுவரை வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் சூழலில் தற்போது இல்லை. கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். எங்களிடம் போதிய பணம் வரும் வரை இந்த நிலை தொடரும்.

அவ்வாறு செலுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வட்டியை கூடுதல் மூலதனமாகவோ அல்லது அடுத்த கடனாகவோ கருதி கணக்கில் வைக்கப்படும். தேவை ஏற்பட்டால் இலங்கை ரூபாயில் திருப்பிச் செலுத்துவதற்கான சுதந்திரத்தை நிதியமைச்சகம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இதனை வெளிநாட்டு அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையின் நிதி நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்கும் பொருட்டு அரசு அவசரகால நடவடிக்கையை கடைசி முயற்சியாக மட்டுமே இதனை எடுத்துள்ளது.

தெற்காசிய நாட்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் மீட்புத் திட்டத்தை அணுக வேண்டிய சூழல் உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து கடன் வழங்குபவர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான முறையில் செயல்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடனை செலுத்துவது சவாலானது மற்றும் சாத்தியமற்றது என்ற ஒரு கட்டத்திற்கு வந்துள்ளோம். கடனை மறுசீரமைப்பது மற்றும் கடின கடனைத் தவிர்ப்பதுதான் எடுக்கக்கூடிய சிறந்த நடவடிக்கை என தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

Leave a Comment