கொழும்பு காலி முகத்திடலில் தன்னெழுச்சியாக குவிந்துள்ள போராட்டக்காரர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அப்பகுதியில் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கிய சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இந்த போராட்டச் செய்தி இடம்பெற்றுள்ளது.
கோட்டாவை வீடு செல்ல வலியுறுத்தும் மக்கள் புரட்சிப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களிற்கான சகல அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் அடை மழை பெய்து வருகின்ற போதும், அதனால் போராட்டம் ஓயவில்லை. தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் தங்கியுள்ளனர்.
தற்காலிக மலசலகூடம், உணவு, குடிதண்ணீர், மருத்துவ ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.