ஆந்திராவில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். இதில், நடிகையும், எம்.எல்.ஏவுமான ரோஜா முதன்முறையாக அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்ற பின்னர், அப்போது ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், வெறும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இந்த அமைச்சர்கள் பதவி வகிப்பர் என்றும், அதன் பின்னர் புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நெருங்குவதால், புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் தீர்மானித்தார்.
அதன்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில், கவுதம் ரெட்டி சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகனிடம் சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இதுவரை சிறப்பாக பணியாற்றிய மற்றும் மூத்த அமைச்சர்கள் பட்டியல் முதலில் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிதாக யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது பழைய அமைச்சர்கள் பட்டியலில் இருந்து 10 பேரும், புதிதாக 15 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா ஆகியோ ருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர்.கே. ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் முதன்முறை ஆந்திர அமைச்சரவையில் இடம் பெறுகிறார்.
புதிய அமைச்சரவையில் திருப்பதி உட்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களுக்கு நேற்று மாலை அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் அனைவரும் அமராவதிக்கு புறப்பட்டு சென்றனர்.
இன்று திங்கட்கிழமை காலை 11.31 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் ஆளுநர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.