2022ஆம் ஆண்டு நிகழவிருக்கும் குருப் பெயர்ச்சியில் குரு பகவான் எந்த ராசியிலிருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்… மாற்றம் அடைவதினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை என்பதைத் தெரிந்துகொள்வோம்.
நவக்கிரகங்களில் முழு சுபக் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.
இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், அடுத்தது, புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.
குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்
நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்துவிட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.
குருவின் பலம்
குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.
குரு திரிகோணத்தில் இருந்தால் பெரிய பலம் என்றும், கேந்திரத்தில் இருந்தால் மத்திம பலம் என்றும், மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அதம பலம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சார பலம் மிக முக்கியம்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயனம் சிசிரரிது பங்குனி மாதம் 30ஆம் திகதி (விடிந்தால் சுபக்ருது வருடம் – சித்திரை 01) – 13.04.2022 புதன் கிழமை பின்னிரவு வியாழன் முன்னிரவு – சுக்ல பக்ஷ த்ரயோதசி – பூரம் நக்ஷத்ரம் – வ்ருத்தி நாமயோகம் – பாலவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 55.22க்கு (உதயாதி மறு நாள் காலை மணி 4.16 மணிக்கு) கும்ப லக்னத்தில் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
குரு பார்வை – ஒரே வரியில்
சொந்த வீடு – தனுசு, மீனம்
உச்சராசி – கடகம்
நீச்சராசி – மகரம்
திசை – வடக்கு
அதிதேவதை – பிரம்மா
நிறம் – மஞ்சள்
வாகனம் – யானை
தானியம் – கொண்டைக்கடலை
மலர் – வெண்முல்லை
வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் – புஷ்பராகம்
நிவேதனம் – கடலைப்பொடி சாதம்
உலோகம் – தங்கம்
இனம் – ஆண்
உறுப்பு – தசை
நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் – புதன், சுக்கிரன்
மனைவி – தாரை
பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு
குரு காயத்ரீ மந்திரம்
ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்
உத்தம பலன் பெறும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம், மீனம்
மத்திம பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், மிதுனம், தனுசு, கும்பம்
பரிகாரத்தின் மூலம் பலன் பெறும் ராசிகள்: மேஷம், சிம்மம், துலாம், மகரம்