நடிகர் வினய், பிரபல நடிகை விமலா ராமனை காதலித்து வருவதாகவும், அவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய் இதையடுத்து அவர் மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தினார்.
அவரது உயரத்திற்கும், தோற்றத்திற்கும் வில்லன் வேடம் செட் ஆனதால் தொடர்ந்து அவ்வாறே நடித்து வருகிறார் வினய்.
அண்மையில் இவர் வில்லனாக நடித்த டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி வில்லனாக மாறியுள்ளார்.
இந்நிலையில், வினய்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
42 வயதாகும் நடிகர் வினய், 40 வயதாகும் நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறாராம். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் ஒன்றாக மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாவும் சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆனால் அவர்களின் திருமணம் குறித்த செய்திகளை நடிகர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ உறுதிப்படுத்தவில்லை.
நடிகை விமலா ராமன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தவர். ‘பிரணயாகலம்’, ‘கல்லூரி குமரன்’, ‘நேரம்’, ‘ஒப்பம்’, ‘ரோமியோ’ உள்ளிட்ட மலையாளப் படங்களின் மூலம் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய், இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.