ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிபந்தனையின்றி ஐக்கிய மக்கள் சக்தி நிற்கிறது என்றும் அவர்களுக்காக 600க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வாழ்வுரிமையைக் கோரும் மக்களை பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டை நாளுக்கு நாள் பாதாளத்திலும் இருளிலும் தள்ளும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஜனநாயகத்துக்காக போராடி வருவதாகவும், அந்த ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் நீட்டிக்கும் ஒவ்வொரு தருணத்திற்கும் எதிராக மக்களுக்காக எதிர்க்கட்சியாக நிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
காலங்காலமாக மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடினாலும் அரசாங்கம் எதனையும் நிவர்த்தி செய்யாததால் நாடு அராஜகமாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களை விரக்தியடையச் செய்து நாட்டை இருளில் மூழ்கடித்த பலவீனமான, திறமையற்ற மக்கள் விரோத ஜனாதிபதி பதவி விலகி நாட்டை நடத்தக்கூடிய ஒரு குழுவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனநாயகப் போராட்டங்களில் கலந்துகொண்டு அரச அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்துப் பிரஜைகளுக்கும் கட்சி பேதமின்றி இலவச சட்ட உதவிகளை வழங்க 600க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.