‘நீங்கள் பிரதமராக இல்லாதபோது பாகிஸ்தான் சிறப்பாக இருந்தது’ எனக் கூறி இம்ரான் கானை கிண்டல் செய்துள்ளார் அவரது முன்னாள் மனைவி ரெஹ்மான் கான்.
கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார்.
இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதுகடந்த 28ஆம் திகதி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்தன. இதன் மீது வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாகிஸ்தானை உருவாக்குவேன் என்ற வாக்குறுதியோடு ஆட்சியமைத்த இம்ரான் கான் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாமல் மக்கள் மத்தியிலும் ஆட்சியாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹ்மான் கான் அவரது ட்விட்டர் பக்கத்தில், இம்ரான் ஒரு வரலாறு!! நாம் அனைவரும் புதிய பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ள குழப்பத்தைக் கலைய ஒன்றுபட வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ட்வீட்டில் நீங்கள் பிரதமராக இல்லாத போது பாகிஸ்தான் சிறப்பாகவே இருந்தது என்று கூறியுள்ளார்.
Yes Pakistan was great when you were not the PM. #الوداع_سلیکٹڈ_الوداع
— Reham Khan (@RehamKhan1) March 31, 2022
முன்னதாக நாட்டு மக்களுக்காக நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், “என்ன நேர்ந்தாலும் நான் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். நான் ஒரு கிரிக்கெட் வீரர். கடைசிப் பந்து வரை ஆடுவேன். நான் சிறு வயதில் பார்த்த பாகிஸ்தான் வேறு. இப்போதுள்ள பாகிஸ்தான் வேறு. என்னுடன் மலேசிய இளவரசர் படித்தார். பாகிஸ்தானின் வளர்ச்சியைப் பற்றி அறிய தென் கொரியாவிலிருந்து அரசு அதிகாரிகள் வருவர். மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து நமது பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வருவார்கள். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. என் தேசம் இழிவுபடுத்தப்படுகிறது” என்று கூறியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டியே இம்ரானின் முன்னாள் மனைவி ரெஹ்மான் கான் அவரை கிண்டல் செய்திருக்கிறார்.