மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அக்கட்சி தகவல் தெரிவித்துள்ளது
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின்னர் செய்தியாளர் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அக்கட்சி தகவல் தெரிவித்துள்ளது. வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சீமான் சோர்வுற்றதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவொற்றியூர், அண்ணாமலை நகர் இரயில்வே கேட் பகுதி மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேரில் சந்திக்கச்சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சோர்வுற்றார்.
இதன் காரணமாகவே காரணமாகவே மயக்கம் ஏற்பட்டது. தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பினார். மருத்துவமனையில் முழு உடல்நலப் பரிசோதனைக்குப் பிறகு, வீடு திரும்பினார்!’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.