மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாத பட்சத்தில், காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறும் அல்லது பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி தீர்வைக் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்தார்.
இல்லை என்றால் மீண்டும் மத்திய குழு கூடி ஆட்சியை விட்டு விலகுவது குறித்து முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் இறுதிக் கடிதம் இதுவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், மக்கள் பக்கம் நின்று அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் இறுதி தீர்மானம் எடுக்க மத்திய குழு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (1) பிற்பகல் கட்சித் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக சாந்த பண்டார தெரிவித்தார்.