தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்குமிடையிலான சந்திப்பு இன்று (28) மாலை 4.30 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளே, துணைத்தூதர், அரசியல் விவகாரங்களிற்கான செயலர் உள்ளிட்டவர்கள் இந்திய தரப்பில் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவை சேனாதிராசா இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கொழும்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திருப்பிய அவர், உடனடியாக கொழும்பு செல்ல முடியாததால் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
சந்திப்பின் தொடக்கத்தில், அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பு எவ்வாறு அமைந்தது என ஜெய்சங்கர் வினவினார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு பற்றி இரா.சம்பந்தன் விளக்கமளித்தார். 13வது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்ப்படுத்த அவர்கள் தயங்குகிறார்கள் என இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியுடனான பேச்சு விவகாரங்களை விபரிக்குமாறு எம்.ஏ.சுமந்திரனை, சம்பந்தன் கேட்டுக் கொண்டார். 5 விடயங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து, அந்த விடயங்களை விபரித்தார்.
இதற்கு கருத்து தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர், ‘ஜனாதிபதி கோட்டாபயவுடனான சந்திப்பிலும், கூட்டமைப்புடனான பேச்சு பற்றி வினவினேன். நீங்கள் இப்பொழுது சொன்ன அதே தகவல்களையே அவரும் சொன்னார். என்னுடைய அனுபவத்தின்படி, இப்படியான தருணமொன்றில் (பேச்சுவார்த்தை முயற்சி சமயம்) அரசும், நீங்களும் (தமிழர் தரப்பு) ஒரே விதமாக சொன்ன முதலாவது சந்தர்ப்பம் இதுதான்” என தெரிவித்தார்.
செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில், ”13வது திருத்தத்தை வலியுறுத்தி 6 தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளோம். எனினும், இந்திய தரப்பிலிருந்து போதுமான பிரதிபலிப்பு இருக்கவில்லை. அந்த முயற்சிக்கு அங்கீகாரமளிப்பதை போல இந்தியா செயற்பட வேண்டும். அப்படி இந்தியா செயற்பட்டால்தான், தமிழ் தரப்புக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக செயற்பட வாய்ப்பு ஏற்படும். அத்துடன், அரசாங்கத்திற்கும் அழுத்தம் ஏற்படும்” என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை அவதானமாக செவிமடுத்த எஸ்.ஜெய்சங்கர், அது பற்றி அவதானம் செலுத்துவதாக தெரிவித்தார்.