பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தன் மீதான வதந்திக்கு நேரடியாக விளக்கம் கொடுத்துள்ளார். சமந்தாவுடன் பிரச்சினை என வந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அவர் பேசியுள்ள நேர்காணல் அமைந்திருக்கிறது.
2012ஆம் ஆண்டில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத்தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அங்கு முன்னணி நடிகையாக திகழ்கிறார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் தயாராகும் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை சமந்தாவை விமர்சித்து காரசாரமாக தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பூஜா ஹெக்டே கருத்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டு விட்டது என்று அவர் விளக்கம் அளித்தார். ஆனாலும் சமந்தாவின் ரசிகர்கள் தொடர்ந்து அவரை வசைபாடி வந்தனர்.
பூஜா ஹெக்டே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ‘உங்களுக்கும், சமந்தாவுக்கும் பிரச்சினையாமே. அவரை கடுமையாக விமர்சித்தது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பூஜா ஹெக்டே பதில் அளிக்கையில், ‘‘நேர்மறையான விஷயங்களை விட எதிர்மறையான விஷயங்கள் தான் அதிகம் பேசப்படுகின்றன. அது உண்மையில்லை என்றாலும் அதை பற்றிதான் அதிகம் விவாதிக்கின்றனர். நான் எப்போதும் நேர்மறையாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.