25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இந்தியா

ஊதாரி காதலனுடன் உல்லாசமாக இருக்க நூதன மோசடி: உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த கல்லூரி மாணவி!

சென்னையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரியின் செல்போனிலிருந்து கூகுள் பே, போன் பே மூலம் சிறுகச் சிறுக 12 லட்ச ரூபாயை திருடிய கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் ஊர் ஊராக இன்பச் சுற்றுலா சென்றபோது தங்கும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான அகஸ்டின் கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டை புதுப்பிப்பதற்கு பணம் எடுப்பதற்காக சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார்.

விருப்ப ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்துடன் சேர்த்து அவரது வங்கி கணக்கில் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பணம் இருந்த நிலையில், தற்போது 8 லட்ச ரூபாய் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தனது பணம் எங்கே என்று கேட்டு வங்கி அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். வங்கி கணக்கின் பரிவர்த்தனையை ஆய்வு செய்தபோது அகஸ்டினின் செல்போனில் உள்ள கூகுள் பே மற்றும் போன் பே மூலம் சிறுகச் சிறுக பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வங்கியில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு தெரியாமல் தன்னுடைய பணம் திருடுப் போயுள்ளது என்பதை அறிந்த அகஸ்டின் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில் கடந்த சில மாதங்களாக அகஸ்டினின் செல்போனிலிருந்து கூகுள் பே, போன் பே மூலம் இரண்டு குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வங்கி கணக்கில் இருந்து எங்கிருந்தெல்லாம் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில் கோவா, கேரளா பாண்டிச்சேரி போன்ற இடங்களில் எடிஎம் மூலமும், ஆன்லைனிலும் பண பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.

அந்த வங்கிக் கணக்குக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை வைத்து அதன் நெட்வொர்க் சிக்னலை பின்தொடர்ந்த போலீசார், சம்பந்தப்பட்ட எண்ணிற்குரியவர் சதீஷ்குமார் என்பதையும் அவர் பாண்டிச்சேரியில் இருப்பதையும் கண்டுபிடித்தனர் .

உடனடியாக தனிப்படை போலீசார் பாண்டிச்சேரி விரைந்தனர். சதீஷ்குமார் தங்கி இருந்த தனியார் சொகுசு விடுதி அறைக்குள் அதிரடியாக நுழைந்தனர் போலீசார்.

அந்த அறையில் சதீஷ்குமாருடன், ஒரு இளம்பெண்ணும் இருந்துள்ளார். இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது உடனிருந்த இளம் பெண், அகஸ்டின் வீட்டில் 15 வருடங்களாக பணியாளராக வேலை பார்த்து வரும் வளர்மதி என்பவரது 19 வயதான மகள் சுமித்ரா என்பதும், இவர் மூலமாகத்தான் அகஸ்டின் வங்கிகணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதும் தெரியவந்தது.

தனக்கு குழந்தைகள் இல்லாததால் அகஸ்டின் வளர்மதியின் மகள் சுமித்ராவை தனது மகள் போலவே பாவித்து அவர் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்துள்ளார்.

ஆண்ட்ராய்டு செல்போனின் முழு பயன்பாட்டை அறிந்திராத அகஸ்டின், தனது செல்போன் பாஸ்வேர்டு முதல் வங்கி விவரங்கள் வரை அனைத்தையும் சுமித்ராவுக்கு தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலை ராணிமேரிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சுமித்ராவுக்கு கே.கே நகரை சேர்ந்த சதீஷ்குமாருடன் காதல் மலர்ந்துள்ளது.

அகஸ்டினின் மொபைலை எடுத்து அவருக்கு தெரியாமல கூகுள் பே, போன் பே அனைத்தையும் பதிவிறக்கம் அதிலிருந்து தனது காதலனின் இரண்டு வங்கி கணக்கிற்கு பணத்தை சிறுகச் சிறுக மாற்றி காதலனுக்கு பல்சர் பைக் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார்.

இதனை அகஸ்டின் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 12 லட்சம் ரூபாய் வரை பணத்தை காதலனின் வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார் சுமித்ரா என்கின்றனர் போலீசார்

லட்சக்கணக்கில் பணம் சேர்ந்ததும் காதலனுடன் கோவா, பெங்களூரு, மும்பை, எர்ணாகுளம், கோவை, பாண்டிச்சேரி என்று ஊர் ஊராக உல்லாசமாக சுற்றி ஓட்டலில் ரூம் போட்டு காதலை வளர்த்துள்ளனர்.

கைதான காதல் ஜோடியிடமிருந்து 4 புதிய செல்போன்கள், 79 ஆயிரம் ரொக்கப்பணம், 2.5 சவரன் தங்கச் செயின் மற்றும் புதிய பல்சர் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் இவர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக அகஸ்டின் உறவினர் தீபா என்பவர் செய்தியாளர்களை சந்தித்த போது, தனது சித்தப்பாவிற்கு அண்ட்ராய்டு தொலைபேசி உபயோகித்த கூட தெரியாது. அவருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் சுமித்ராவை தனது மகளை போலவே வளர்த்து வந்துள்ளார். குறிப்பாக இரண்டு வருடங்களாக இந்தியன் வங்கியில் வந்து எந்த ஒரு குறுஞ்செய்திய தொலைபேசிக்கு வருவதில்லை எனவும் வங்கியின் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment