வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்தில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிலையத்தின் ஊழியருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு இன்று (27) காலை 6600 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 13200 லீட்டர் டீசல் தாங்கிய பவுசர் ஒன்று வருகை தந்திருந்தது. வாகனங்களுக்கு டீசல் முழுமையாக நிரப்படுவதுடன் ஒரு நபருக்கு 1000 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் கலன்களில் மண்ணெண்ணெய் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த சமயத்தில் இடையில் வந்தவர்களுக்கு எரிபொருள் நிலைய ஊழியர் மண்ணெண்ணெய் வழங்கியதாக தெரிவித்து வரிசையில் நின்ற மக்கள் எரிபொருள் நிலைய ஊழியருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் நீடித்தது.
இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் இடையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரை வெளியேற்றியமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.