தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தேர்தல் தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி கூறுகிறது.
அரசின் தவறான பொருளாதார கொள்கைகளிற்கு எதிராக நுகேகொடையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, உலகில் எந்தவொரு அரசாங்கத்தையும் மக்கள் சக்தியினால் கவிழ்க்க முடியும் என தெரிவித்தார்.
தற்போதைய அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், எனவே தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
தேர்தல் மூலம் அரசாங்கம் மாற்றப்படுவது வழமையாக இருப்பினும்; எந்த அரசியலமைப்பு விதிகளையும் விட மக்கள் சக்தி மிகப் பெரியது. தற்போதைய நிர்வாகம் மற்றும் கடந்த 74 ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த அனைத்து குழுக்களிடமிருந்தும் நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 18 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள போதிலும் இதுவரை 21 அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. நாட்டில் அமைச்சர்கள் இலாகாக்கள் தொடர்ந்து மாறிவருவது குழப்பத்தை அதிகப்படுத்துகிறது என்றார்.
இந்த காலப்பகுதியில் ஏறக்குறைய 30 அரச சபைகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது இராஜினாமா செய்துள்ளனர். அரசின் தவறான நிர்வாகத்தால் பொதுமக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களுடன் கிட்டத்தட்ட 1500 கொள்கலன்கள் இருப்பதாகவும் ஆனால் அவற்றை அகற்றுவதற்கு அரசாங்கத்தால் நிதியை விடுவிக்க முடியவில்லை.
சில கப்பல் நிறுவனங்கள் இலங்கைக்கு வர மறுத்துள்ளதால், தொழில்முனைவோர் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த பின்னணியிலும் நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதாக சுட்டிக்காட்டினார்.