சென்னையில் ஆணழகன் எனக்கூறி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டு 20 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, காரில் அழைத்துச்சென்று சீரழித்த புகாருக்குள்ளான மொடலிங் மன்மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்
சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வரும் 26 வயதான முகமது சையது மீது மூன்று இளம் பெண்கள் ஒரே நேரத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மூன்று பேரையும் ஒரே நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி காரில் அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட முகமது சையது நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாகவும் இதனால் வாழ்க்கையை பறிகொடுத்து தவிப்பதாகவும் அந்த மூன்று இளம் பெண்களும் புகாரில் தெரிவித்திருந்தனர் .
காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வேப்பேரி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் செல்போனிலிருந்து , முகமது சையதிற்கு தனி தனியாக குறுஞ்செய்தி அனுப்பி மகளிர் போலீசார் சோதித்தனர். சிறிது நேரத்தில் மூன்று பெண்களின் செல்போனிற்கும் ஐ லவ் யூ மெசேஜை ஒரே நேரத்தில் தட்டிய முகமது சையது, மூன்று பெண்களையும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரத்தில் சந்திக்க வருமாறு குறுஞ்செய்தி அனுப்பி, தான் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை என்பதை போலீசாரிடம் உறுதிப்படுத்தினான்.
இதையடுத்து பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் தனி தனியாக 3 வழக்குகள் பதிவு செய்த வேப்பேரி மகளிர் போலீசார் முகமது சையதை கைது செய்தனர்.
முகமது சையது “நம்ம சென்னை ” என்ற பெயரில் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளை நடத்தியபோது இந்த மூவரும் வெவ்வேறு தருணங்களில் அறிமுகமாகியுள்ளனர்.
அதில் ஒரு இளம்பெண் மொடல் ஆக பணிபுரிகிறார். சினிமா வாய்ப்பு வாங்கித் தருகிறேன், திருமணம் செய்கிறேன் என அவருடன் ஹொட்டல்களில் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தார்.
அண்மையில் ஹொட்டல் அறையில் முகமது சையது போதையில் நிதானமிழந்திருந்த போது, அவரது விரல் அடையாளத்தை பாவித்து, தொலைபேசிக்குள் நுழைந்துள்ளார் அந்த பெண்.
அதில், சையத் பல பெண்களுக்கு வாட்ஸ் அப்பில் ரொமான்டிக் மெசேஜ் அனுப்பி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதிலிருந்த மற்ற பெண்களின் செல்போன் எண்ணை எடுத்து தொடர்புகொண்டு விவரத்தைக் கேட்ட பொழுது ஒரே நேரத்தில் இந்த மூன்று பெண்களையும் அவர் காதலிப்பதாக கூறி ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
முதலில் பல பெண்களுடன் இருக்கும் தொடர்பை மறுத்த முகமது சையது, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சாட்டிங் உள்ளிட்டவற்றை காண்பித்து விசாரித்தபோது 20-க்கும் மேற்பட்ட பெண்களை கடந்த மூன்று ஆண்டுகளில் காதலிப்பதாக கூறி காரில் அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதையும், பின்பு அவர்களை ஏமாற்றியதையும் வாக்குமூலமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
கஞ்சா, ஹூக்கா போதைப் பழக்கம் உள்ள முகமது சையத், பார்ட்டிக்கு செல்லும் பொழுது அங்கு வரும் பெண்களிடம் பழகுவதும், தான் ‘மிஸ்டர் சென்னை’, ‘மிஸ்டர் இந்தியா’ என்றெல்லாம் கதை அளந்து, அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு நாளடைவில் அவர்களையும் காதலிப்பதாக கூறி தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதேபோல் தான் ஏற்பாடு செய்யும் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளுக்கு மாடலிங் துறையைச் சேர்ந்த பெண்களை வரவழைத்து அதன் மூலம் விளம்பர வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததையும் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளான்.
பேஷன் டெக்னாலஜி பயிலும் சில மாணவிகளும் இந்த மோசடி மன்மதனின் ஆசை வலையில் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகமது சையதுவின் செல்போனில் அழிக்கப்பட்ட தகவல்களை சேகரிக்க அதனை கைப்பற்றி சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளனர். பெண்களிடம் அத்துமீற நடமாடும் லாட்ஜாக பயன்படுத்தப்பட்ட அவனது காரை போலீசார் பறிமுதல் செய்ததோடு, கைதான அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.