ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தேசிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது உறுதிப்படுத்தினார்.
இரண்டு அமைச்சர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குள் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளதாக அவர் கூறினார்.
அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சர்வகட்சி மாநாட்டிற்கு முன்மொழியப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்காகவே சர்வகட்சி மாநாடு முன்மொழியப்பட்டதாகவும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக அல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்கள் பிரச்சினைகளை அலட்சியப்படுத்துவதாகவும், மக்கள் எதிர்கொள்ளும் சுமைகளுக்கு உணர்வற்றவர்களாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
எனவே தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான தீர்வுகளை வழங்குவதற்கான சர்வகட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாது என பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அழைப்பிதழ் கிடைத்தவுடன் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அத்தநாயக்க தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதில் கலந்து கொள்ளும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.