தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் இன்று (19) இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள ரெலோ அலுவலகத்தில் மாலை 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறும்.
ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்பை ஏற்று சந்திப்பிற்கு செல்வதா, அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்வதா மற்றும் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள அண்மைக்கால தகராறுகள் குறித்து இதில் ஆராயப்படவுள்ளது.
ரெலோவின் தலைமைக்குழுவில் 22 பேர் அங்கம் வகிக்கிறார்கள்.
இன்றைய சந்திப்பு தொடர்பில் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இன்றைய சந்திப்பில் கோட்டாபயவின் அழைப்புக்கள் தொடர்பில் முக்கியமாக விவாதிப்போம். நெருக்கடியில் சிக்கியுள்ள கோட்டாபயவை பிணை எடுக்கும் எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம்.
இதுதவிர, தமிழ் அரசு கட்சியின் கடைநிலை தொண்டர்கள் பேஸ்புக்கில் ரெலோவிற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசு கட்சிக்குள்ளேயே குழப்பத்தில் ஈடுபடும் எம்.பியொருவரினால் ‘சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டுள்ள பேஸ்புக்’ பணியாளர்கள்தான் இவர்கள். இவர்கள் தொடர்பில் கட்சி நடவடிக்கையெடுக்கவில்லை. அதைவிட, சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம் போன்றவர்கள் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து, தமிழ் அரசு கட்சி தலைமைக்கு அறிவிப்போம்’ என்றார்.