எதிர்வரும் 25ஆம் திகதி தன்னை வந்து சந்தியுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ச அறிவித்துள்ளார்.
அதன்படி, அன்றைய தினம் அவரை சந்திப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட் என்பன தீர்மானித்துள்ளன. அரசுக்கு ஆரம்பத்திலேயே அழுத்தம் கொடுக்கக்கூடாதென்பதே இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. எனினும், ரெலோ இந்த சந்திப்பில் கலந்து கொள்வதை உறுதி செய்யவில்லை.
எதிர்வரும் 19ஆம் திகதி தமது தலைமைக்குழு கூடி எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே, முடிவை அறிவிப்போம் என தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இன்று சந்திப்பு நடக்கவிருந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென ரெலோ தீர்மானம் எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில், ரெலோவின் நிலைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டது.
நிபந்தனைற்ற பேச்சில் கலந்து கொள்ள முடியாதென ரெலோ தெரிவித்திருந்தது. விடுதலைப் புலிகள் கூட பேச்சுவார்த்தைக்கு முன்னர் போர் நிறுத்தத்தை அமுல்ப்படுத்தும் நிபந்தனையை விதித்தார்கள் என தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, தொல்பொருள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைத்து, ஜனாதிபதியின் பதிலின் அடிப்படையில் சந்திப்பை நடத்தலாமென ரெலோ தெரிவித்தது.
எனினும், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் சிலர், ஆரம்பத்திலேயே அரசுக்கு எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கக்கூடாது, நீண்டகாலத்தின் பின் ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று சந்திக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
ரெலோ சுட்டிக்காட்டிய விடயங்களை பேச்சின் போது, தான் கட்டாயம் வெளிப்படுத்துவேன் என இரா.சம்பந்தன் உத்தரவாதமளித்தார்.
எனினும், சம்பந்தனின் உத்தரவாதமல்ல, கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவாதமே தேவையென ரெலோ தரப்பு அழுத்தம் கொடுத்தது.
25ஆம் திகதி ஜனாதிபதியின்அழைப்பை நிபந்தனையின்றி தாம் ஏற்கப் போவதாக எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் தெரிவித்தனர். ஆரம்பத்தில் நிபந்தனைக்கு சார்பாக பேசிய மாவை சேனாதிராசாவும் பின்னர் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாட்டையே தாமும் கொண்டுள்ளதாக புளொட் தெரிவித்தது.
25ஆம் திகதி ஜனாதிபதியை கூட்டமைப்பு சந்திக்கும் என ஊடகங்களிடம் கூறுவதாக எம்.ஏ.சுமந்தின் தெரிவித்தார்.
எனினும், ரெலோ அதை மறுத்தது. தமிழ்அரசு கட்சியும், புளொட்டும் சந்திப்பதாக கூறுங்கள். ரெலோ அந்த முடிவை எடுக்கவில்லையென்றனர்.
எதிர்வரும் 19ஆம் திகதி ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அதில் ஆராய்ந்து முடிவை அறிவிக்கிறோம் என்றனர்.
24ஆம் திகதி நாடாளுமன்ற குழுக்கூட்டம் மீண்டும் கூடி, இந்த விடயத்தை ஆராயும்.