முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் இரண்டு சிறுமிகள் அலரி விதையை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
நேற்று (14) இந்த சம்பவம் நடந்தது.
சிறுவர் இல்லத்தை சேர்ந்த 13, 14 வயதான இரண்டு சிறுமிகள் நேற்று பாடசாலை சென்றனர். பாடசாலையில் வைத்தே அலரி விதையை உட்கொண்டனர்.
முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் அவர்கள் கல்வி கற்கிறார்கள்.
பொலிசார் நடத்திய விசாரணையில், சிறுவர் இல்லத்தில் வசிக்கக்கூடிய நிலைமையில்லையென சிறுமிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தம்மை நிர்வாகத்தினர் சரமாரியாக திட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
இதை பொறுக்க முடியாமலேயே அவர்கள் அலரி விதை உட்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரமும் இந்த சிறுவர் இல்லத்திலிருந்து 5 சிறுமிகள் தப்பியோடியுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவங்களையடுத்து முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகரான கே.பி என்ற குமரன் பத்மநாதனின் கண்காணிப்பில் இந்த இல்லம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.