யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது, அதன் இணைத் தலைவர்களிடம் திகதி கோரப்பட்டு, வழமைபோன்று கூட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு, அந்தக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், மாவட்ட செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த விடயம் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை கூட்டுமாறு, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், நேற்று முன்தினம் (09) கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமரின் இணைப்புச் செயலாளர் என்ற அடிப்படையில், அவர் இவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பியுள்ளார் எனத் தாம் கருதுவதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரிடம் திகதி கோரப்பட்டு, அதற்கமைவே வழமைபோன்று கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், கூட்டம் தொடர்பான அழைப்பிதல், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கத்திற்கும் அனுப்பப்படும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.