ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நாளை மறுநாள் (08) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 15 அம்ச தீர்மானம் ஒன்றை அண்மையில் சமர்பித்தது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (05) இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரன் அலஸ்ஸின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விடுத்த அழைப்பு குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக்கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டிரன் அலஸ், கெவிந்து குமாரதுங்க, அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.