மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் கிட்டிணன் அவர்களது 14 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னனி கட்சியினால் நினைவு கூறப்பட்டது.
உயிர் நீத்த நாடாளுமன்ற உறுப்பினர் யுத்த காலத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் நினைவு கூறப்பட்டதுடன், மௌன, மலர் அஞ்சலி செலுத்தியதுடன் ஈகைச் சுடரேற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மாவட்ட அமைப்பாளர் க.குககுமாரராஜா ஆகியோர்களுடன் சிறுவர் முதல் முதியவர்கள் என பலரும் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
.
இதன்போது தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உரையாற்றுகையில் மாமனிதர் சிவநேசன் கிட்டிணன் அவர்கள் 2008.03.06 ஆம் திகதி எதிரிகளால் கொல்லப்பட்டார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பானத்தில் 43370 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். கட்சி அரசியல் தாண்டி தமிழினம் என்ற ரீதியில் செயற்பட்டவர். சர்வதேச மட்டத்தில் குரல் கொடுத்த மாமனிதர்களான ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ் மற்றும் சிவநேசன் போன்றவர்கள் விட்டுக்கொடுக்காமல் தமிழ் மக்களின் உரிமைகளை உலகத்திற்கு பறை சாற்றியமையினாலேயே இவர்கள் கொல்லப்பட்டனர்.
எனவே இவர்கள் தமிழ் மக்களினால் நினைவு கூறப்படுவது வரலாற்றுக் கடமையாகும்.
அவரது காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் இருந்தனர். ஆனால் இவரது நினைவேந்தலைக் கூட செய்யமுடியாதவர்களாக உள்ளனர். எனவே இவ்வாறனவர்களை யார் என்று மக்கள் உணரவேண்டும் என்று தர்மலிங்கம் சுரேஸ் குற்றம் சாட்டினார்