most wanted தீவிரவாதி, ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவராக அறியப்படும் சிராஜுதீன் ஹக்கானி பொதுவெளியில் முதல்முறையாக தனது முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் பொலிஸ் பட்டமளிப்பு விழா மூலமாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முதன்முதலில் தனது முகத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிராஜுதீன் ஹக்கானி.
தலிபானின் மிகவும் இரகசியமான தலைவர்களில் ஒருவராகவும், அமெரிக்காவின் most wanted பட்டியலில் உள்ள சிராஜுதீன் ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசில் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். போலீஸ் பட்டமளிப்பு நிகழ்வில், “உங்கள் திருப்திக்காகவும், உங்கள் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும்… நான் ஊடகங்களில் தோன்றுகிறேன்” என்று சிராஜுதீன் ஹக்கானி பேசியுள்ளார். இதையடுத்து, ஹக்கானியின் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தலிபான் அமைப்பின் துணை அமைப்பாக கருதப்படுவது ஹக்கானி நெட்வொர்க். இதனை நிறுவியவர் ஜலாலுதீன் ஹக்கானி. சோவியத் ஆக்கிரமிப்பிற்கு எதிரான முஜாஹிதீன் போரின் போது முஜாஹிதீன் தளபதியாக இருந்தவர்தான் ஜலாலுதீன் ஹக்கானி. இவரின் மகனே இந்த சிராஜுதீன் ஹக்கானி. இவரே தற்போது ஹக்கானி நெட்வொர்க்கை வழிநடத்தி வருகிறார்.
ஹக்கானி நெட்வொர்க் என்பது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான்களின் நிதி மற்றும் இராணுவ சொத்துக்களை மேற்பார்வையிடும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாக அறியப்படுகிறது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவரும் ஹக்கானி தீவிரவாத குழுவினர், ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலை அறிமுகப்படுத்தியதே இந்த ஹக்கானி நெட்வொர்க்கே. பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல் கொய்தா அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட பரந்த இஸ்லாமிய பயங்கரவாத மாஃபியாவாக அறியப்படும் இந்த நெட்வொர்க்கை அமெரிக்கா 2012ஆம் ஆண்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்தது.
د اسلامي امارت د کورنیو چارو محترم وزیر خلیفه صاحب سراج الدین حقاني حفظه الله د د ملي پولیسو د فراغت مراسم پرانستل. pic.twitter.com/JDQahcrQZQ
— Zabihullah (..ذبـــــیح الله م ) (@Zabehulah_M33) March 5, 2022
2018இல் ஜலாலுதீன் ஹக்கானி இறந்த பிறகு ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவராக பொறுப்பேற்றார் சிராஜுதீன். ஆனால் அதற்கு முன்னதாகவே பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி உலகளவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
2008ஆம் ஆண்டு காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2009 – 2010இல் இந்தியாவை குறிவைத்து ஹக்கானி நெட்வொர்க் தாக்குதல் நடத்தியது. 200இல் காபூல் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் உள்ளிட்ட 6 நபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதே ஆண்டில் அன்றைய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாயை கொலை செய்ய முயற்சி நடந்தது.
மேலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படைகளுக்கு எதிராக எல்லை தாண்டிய தாக்குதல்கள் ஹக்கானி நெட்வொர்க்கால் அடிக்கடி நடத்தப்பட்டன. இவை அனைத்தையும் செய்ய மூளையாக இருந்தவர் சிராஜுதீன் ஹக்கானி என்று சொல்லப்படுகிறது.
இதனால், அமெரிக்காவின் FBI இவரை ‘ஒரு உலக பயங்கரவாதி’ என்று அறிவித்தது இவரின் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை சன்மானமாக அறிவித்தது.
ஆனால், அவரை கைது செய்ய முடியவில்லை. மேலும், 40 – 50 வயதுக்குள் இருப்பதாக நம்பப்படும் சிராஜுதீன் இருக்கும் இடமும் இதுவரை அறியப்படாமல் இருந்தது. அதுமட்டுமில்லாமல், அவரின் ஒருபுகைப்படம் கூட யாரிடமும் இல்லாமல் இருந்தது. இதனிடையே, தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் சிராஜுதீன் அந்நாட்டு உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன்பின்பும் அவர் பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்துவந்தார். தலிபான்களும் அவரின் புகைப்படத்தை வெளியிடவில்லை.
இப்படியான நிலையில் தான் நேற்று ஆப்கானிஸ்தானில் நடந்த பொலிஸ் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு பட்டமளிக்கும் விழா மூலமாக முதல்முறையாக பொதுவெளியில் தனது முகத்தை காட்டியுள்ளார்.
Pakistani Ambassador stands in attention when Haqqani Network Chief terrorist and Interior Minister of Taliban Sirajuddin Haqqani leaves. But Haqqani ignores him and walks away. pic.twitter.com/E3Q42Eq13U
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) March 5, 2022
கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான வன்முறைகளுக்கு காரணமாக குற்றம் சாட்டப்படும் சிராஜுதீன் ஹக்கானியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, காபூலில் நடந்த பொலிஸ் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளிடம் பேசிய பிறகு சிராஜுதீன் ஹக்கானி நிகழ்விலிருந்து வெளியேறுகிறார். ஹக்கானி கடந்து செல்லும்போது, ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அஹ்மத் கான், தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இந்தக் காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது.
இதேவேளை, காபூலில் ‘தியாகிகளின்’ குடும்பத்தினருடன் நடந்த சந்திப்பொன்றில் தற்கொலை குண்டுதாரிகளை அவர் பாராட்டியுள்ளார்.
“தியாகிகள் மற்றும் முஜாஹிதீன்களின் ஜிஹாத் மற்றும் தியாகத்தை ஹக்கானி பாராட்டினார். அவர்களை “இஸ்லாம் மற்றும் நாட்டின் ஹீரோக்கள்” என்று அழைத்தார்” என ஆப்கானிஸ்தான் அரச தொலைக்கட்சி தெரிவித்தது.
அதில், சிராஜுதீன் “தியாகிகளின் அபிலாஷைகளுக்கு துரோகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்”, மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 125 டொலர் மற்றும் ஒரு நிலம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.